சின்னமனூர் நகராட்சி தலைவர் தேர்தல் 2 தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிட்டதால் பரபரப்பு
சின்னமனூர் நகராட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்கள் 2 பேர் போட்டியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
உத்தமபாளையம்:
சின்னமனூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளது. இதில் தி.மு.க. 17 இடங்களிலும், அ.தி.மு.க. 6 இடங்களிலும், ம.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.
இதையடுத்து தி.மு.க தலைமை கழகம் சார்பில் நகராட்சி தலைவர் வேட்பாளராக 25-வது வார்டு கவுன்சிலர் அய்யம்மாள் அறிவிக்கப்பட்டார்.
இந்தநிலையில் நேற்று காலை தலைவர் பதவிக்கான தேர்தல் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். தி.மு.க. சார்பில் அய்யம்மாள் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். இதை எதிர்த்து போட்டி வேட்பாளராக தி.மு.க.வை சேர்ந்த 19-வது வார்டு கவுன்சிலர் செண்பகம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் மறைமுக தேர்தல் நடந்தது. இதில் அய்யம்மாள் 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். செண்பகம் 11 வாக்குகள் ெபற்று தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கவுன்சிலர்கள் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் நடந்த துணைத்தலைவர் தேர்தலில் 21-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் முத்துக்குமரன் போட்டியின்றி வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சான்றிதழ் வழங்கினார்.
இந்தநிலையில் தலைவர் தேர்தலில் தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவளித்த அ.தி.மு.க கவுன்சிலர்கள் 6 பேரை கட்சியில் இருந்து நீக்கி ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story