இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற 450 கிலோ கஞ்சா சிக்கியது; 7 பேர் கைது

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் 450 கிலோ கஞ்சா கடத்தமுயன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற 450 கிலோ கஞ்சா போலீசாரிடம் சிக்கியது. இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் தீவிர கண்காணிப்பு
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு மஞ்சள், ஏலக்காய், கடல் அட்டை, வெங்காய விதை, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க கடலோர காவல்படையினர், கடலோர பாதுகாப்பு போலீசார், கியூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் அதிகாலையில் கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ், வேல்ராஜ் மற்றும் போலீசார் கடற்கரையோரங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தாளமுத்துநகர் அருகே உள்ள வெள்ளப்பட்டி பகுதியில் இருந்து கஞ்சா கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
7 பேர் கைது
இதையடுத்து போலீசார் வெள்ளப்பட்டி கடற்கரைக்கு விரைந்து சென்றனர். அங்கு படகில் ஏற்றுவதற்காக கஞ்சாவை மூட்டைகளில் கட்டி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
மேலும், அங்கு படகில் கஞ்சாவை கடத்தி செல்வதற்கு தயாராக நின்று கொண்டிருந்த 7 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி சிலுவைப்பட்டி ஆனந்த் நகரை சேர்ந்த கணேசன் (வயது 49), கணேஷ்புரத்தை சேர்ந்த மாரிகுமார் (32), திரேஸ்புரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் (42), சிலோன் காலனியை சேர்ந்த யோகேசுவரன் (41), லூர்தம்மாள்புரம் 2-வது தெருவை சேர்ந்த இசக்கிமுத்து (40), மேல அழகாபுரியை சேர்ந்த வினித் (25), கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகா கீழபுவனகிரியை சேர்ந்த மன்சூர் அலி (37) ஆகியோர் என்பதும், இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் இருந்து கடத்தல்
மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில், சென்னையில் இருந்து சிலர் கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர். அவர்கள் இலங்கைக்கு கடத்துவதற்காக தூத்துக்குடி பகுதியை சேர்ந்தவர்களை நியமித்து உள்ளனர். அவர்களிடம் கஞ்சாவை ஒப்படைத்துவிட்டு, இலங்கையை சேர்ந்தவர்களிடம் முறையாக ஒப்படைக்கப்படுகிறதா? என்பதை கண்காணிப்பதற்காக மன்சூர் அலியை அனுப்பி வைத்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கைதானவர்களிடம் இருந்து ரூ.90 லட்சம் மதிப்பிலான 450 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லோடு ஆட்டோ, 3 மோட்டார் சைக்கிள்கள், 9 செல்போன்கள் ஆகியவற்றை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story