வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை


வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 7 March 2022 12:55 AM IST (Updated: 7 March 2022 12:55 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

இட்டமொழி:
நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். 

தொழிலாளி

நெல்லை மாவட்டம் பரப்பாடி அருகே உள்ள தாமரைக்குளம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் காணியாளன் மகன் சுடலைப்பழம் (வயது 36) விவசாய தொழிலாளி. இவரது முதல் மனைவி 2 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேறொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 2-வது மனைவியும் சண்டை போட்டு விட்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சுடலைப்பழம் மதுபோதையில் நேற்று முன்தினம் விவசாயத்துக்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சுடலைப்பழம் உயிரிழந்தார். இதுகுறித்து வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காளியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மற்றொரு சம்பவம்

டோனாவூர் புளியங்குளத்தை சேர்ந்தவர் மாசானமுத்து (62). கொத்தனார் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவரது மகன் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த மாசானமுத்து வீட்டை விட்டு வெளியேறி கேசவநேரியில் தனது அண்ணன் மகன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் அங்குள்ள கோவில் அருகில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். 

அவரை  அக்கம்பக்கத்தினர் மீட்டு வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாசானமுத்து இறந்தார். இதுகுறித்து பணகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story