மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி; திண்டுக்கல் பெண்கள் அணி சாம்பியன்

பட்டிவீரன்பட்டியில் நடந்த மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் திண்டுக்கல் பெண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
பட்டிவீரன்பட்டி:
தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட கழகம், திண்டுக்கல் மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் மற்றும் என்.எஸ்.வி.வி. பள்ளிகள் சார்பில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள், பட்டிவீரன்பட்டியில் நடைபெற்றது. இதில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இருபிரிவிலும் 16 அணிகள் பங்கேற்றன. போட்டிகளை தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட கழக தலைவர் ஆதவ் அர்ஜூன் தொடங்கி வைத்தார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற பெண்களுக்கான இறுதிப்போட்டியில் திண்டுக்கல் அணியும், நாகப்பட்டினம் அணியும் மோதின. இதில் திண்டுக்கல் அணி 53-37 என்ற புள்ளிக்கணக்கில் நாகப்பட்டினம் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. நாகப்பட்டினம் அணி 2-ம் இடத்தையும், தஞ்சை அணி 3-ம் இடத்தையும், திருவாரூர் அணி 4-ம் இடத்தையும் பிடித்தன.
இதேபோல் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் தஞ்சாவூர் அணியும், திருவாரூர் அணியும் மோதின. இதில் தஞ்சாவூர் அணி 65-55 என்ற புள்ளிக்கணக்கில் திருவாரூர் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதில், திருவாரூர் அணி 2-ம் இடத்தையும், திண்டுக்கல் அணி 3-ம் இடத்தையும், நாகப்பட்டினம் அணி 4-ம் இடத்தையும் பிடித்தது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிக்கு தங்கப்பதக்கம், பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
இதில், திண்டுக்கல் மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக தலைவர் செண்பகமூர்த்தி, செயலாளர் ஞானவேல், என்.எஸ்.வி.வி. பள்ளிகளின் தலைவர் முரளி, செயலாளர் மோகன்குமார், தலைமை ஆசிரியர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story