ஊர் பெயர் அறிவிப்பு வழிகாட்டு பலகையில் தவறுகள் திருத்தம்

ஊர் பெயர் அறிவிப்பு வழிகாட்டு பலகையில் தவறுகள் திருத்தம்
திருப்பூர் மாவட்டம் முத்தூர் கடைவீதியில் காங்கேயம் பிரதான சாலையில் வெள்ளகோவில் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஊர்களின் கிலோ மீட்டர்களை அறிவிக்கும் விதமாக உயரமான ஒரு பெரிய வழிகாட்டி பலகை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு புதிதாக வைக்கப்பட்டது. இந்த வழிகாட்டி பலகை சுமார் 25 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வழிகாட்டி அறிவிப்பு பலகையில் ஈரோடு, கொடுமுடி, கரூர், வெள்ளகோவில் ஆகிய ஊர்களுக்கு செல்லும் கிலோ மீட்டர்கள் தூரத்தில் அளவு எழுதப்பட்டு உள்ளது.
மேலும் முத்தூர் கடைவீதி சந்திப்பில் பிரதான சாலையை ஒரு நிமிடத்திற்கு குறைந்தபட்சம் 60 இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் கடந்து சென்று வருகின்றன. இந்த நிலையில் முத்தூர் கடைவீதியில் புதிதாக அமைக்கப்பட்டு இருந்த ஊர் பெயர் அறிவிப்பு வழிகாட்டி பலகையில் ஈரோடு செல்வதற்கான கிலோ மீட்டர் 32 என தவறுதலாக எழுதப்பட்டு இருந்தது. அதாவது முத்தூரில் இருந்து ஈரோடு செல்வதற்கு மொத்தம் 36 கிலோ மீட்டர்கள் ஆகும். ஆனால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டு பலகையில் 32 கிலோ மீட்டர் என தவறுதலாக எழுதி வைக்கப்பட்டு இருந்தது.
கனரக வாகன ஓட்டிகள் குழப்பம்
இதனால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உட்பட பல்வேறு வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் ஈரோடு, கோவை, கரூர், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், சேலம், நீலகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்த வழியாக செல்லும் லாரி, பஸ்கள், சுற்றுலா வாகனங்கள் உட்பட பல்வேறு கனரக வாகனங்கள் ஈரோடு செல்வதற்கு தவறான கிலோ மீட்டரை நம்பி தங்களது வாகனங்களுக்கு போதிய அளவு எரிபொருள் நிரப்பாமல் சென்று வந்தனர்.
இதனால் ஊர் பெயர் அறிவிப்பு வழிகாட்டு பலகையில் எழுதப்பட்டு இருந்த தவறான கிலோ மீட்டர் காரணமாக கனரக வாகனங்கள், வாகன ஓட்டிகள் ஈரோடு செல்வதற்கு முன்பாகவே எரிபொருள் தீர்ந்து சாலையில் நின்று சென்று வந்தன. இதனால் இந்த தவறுதலாக எழுதப்பட்டு இருந்த கிலோ மீட்டரை நம்பி வாகன ஓட்டிகள் உட்பட அனைத்து தரப்பினரும் குழப்பம் அடைந்த நிலையில் சென்று வந்தனர்.
மேலும் முத்தூர் கடைவீதியில் உள்ள சிறிய ரவுண்டானாவில் இதற்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டு இருந்த சிறிய அறிவிப்பு பலகையில் ஈரோடு செல்வதற்கு 36 கிலோ மீட்டர் என சரியாக எழுதப்பட்டு இருந்தது. முத்தூர் கடைவீதியை கடந்து செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இந்த 2 அறிவிப்பு பலகையையும் படித்து விட்டு சென்ற வாகன ஓட்டிகள் ஈரோடு செல்வதற்கு சிறிய அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டு இருந்தது பெரிய அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டு இருந்தது இதில் எது சரியான கிலோ மீட்டர் என தெரியாமல் தட்டு, தடுமாறி செல்லும் சூழ்நிலை ஏற்பட்டு வந்தது.
துரித நடவடிக்கை
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மூலம் முத்தூர் கடைவீதியில் புதிதாக வைக்கப்பட்டு இருந்த உயரமான அறிவிப்பு ஊர் பெயர் வழிகாட்டி பலகையில் ஈரோடு செல்வதற்கு சரியான கிலோ மீட்டர் 36 என்பதை திருத்தி எழுதி வைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள் நகர கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்தது பற்றி தினத்தந்தி நாளிதழில் செய்தி பிரசுரிக்கப்பட்டது.
இதன்படி தினத்தந்தி செய்தி எதிரொலியாக மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி வெள்ளகோவில் கோட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தற்போது கடைவீதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஊர் பெயர் அறிவிப்பு வழிகாட்டி பலகையில் ஈரோடு செல்வதற்கு 32 கிலோ மீட்டர் என தவறுதலாக எழுதி இருந்ததை அழித்துவிட்டு சரியான கிலோ மீட்டர் 36 என எழுதி வைத்து உள்ளனர். ஆனாலும் 6 என்ற எழுத்து ஏற்கனவே எழுதப்பட்டுள்ள 3 என்ற எழுத்தை விட சிறிதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
---
Related Tags :
Next Story