மகனுக்கு ஆதார் கார்டு எடுக்க வந்த தொழிலாளி மயங்கி விழுந்து சாவு; தந்தை இறந்தது தெரியாமல் தட்டி எழுப்பியபடி 3 வயது சிறுவன் கதறல்


மகனுக்கு ஆதார் கார்டு எடுக்க வந்த தொழிலாளி மயங்கி விழுந்து சாவு; தந்தை இறந்தது தெரியாமல் தட்டி எழுப்பியபடி 3 வயது சிறுவன் கதறல்
x
தினத்தந்தி 9 March 2022 9:47 PM IST (Updated: 9 March 2022 9:47 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூரில், மகனுக்கு ஆதார் கார்டு எடுக்க வந்த தொழிலாளி மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். தந்தை இறந்தது தெரியாமல் தட்டி எழுப்பியபடி 3 வயது சிறுவன் கதறியது நெஞ்சை நெகிழ செய்தது.

வேடசந்தூர்:
வேடசந்தூரில், மகனுக்கு ஆதார் கார்டு எடுக்க வந்த தொழிலாளி மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். தந்தை இறந்தது தெரியாமல் தட்டி எழுப்பியபடி 3 வயது சிறுவன் கதறியது நெஞ்சை நெகிழ செய்தது.
 ஆதார் அட்டை எடுக்க...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பாண்டியன்நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 30). இவர், அப்பகுதியில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவருடைய மனைவி ெஜயராணி. இந்த தம்பதிக்கு 3 வயதில் மகன் இருக்கிறான்.
அந்த சிறுவனுக்கு, இன்னும் ஆதார் கார்டு எடுக்கவில்லை. இதனால் தனது மகனுக்கு ஆதார் கார்டு எடுக்க கிருஷ்ணமூர்த்தி முடிவு செய்தார். இதற்காக எரியோட்டில் இருந்து வேடசந்தூருக்கு நேற்று காலை தனது மகனுடன் கிருஷ்ணமூர்த்தி பஸ்சில் வந்தார்.
மயங்கி விழுந்த தொழிலாளி
பஸ்நிலையத்தில் இருந்து வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் ஆதார் கார்டு எடுக்கக்கூடிய தனியார் வங்கிக்கு தனது மகனை தூக்கியப்படி நடந்து வந்தார். தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் அருகே வந்தபோது, திடீரென கிருஷ்ணமூர்த்தியால் நடக்க முடியவில்லை.
இதனையடுத்து தனது மகனை இறக்கி விட்டு, ஏ.டி.எம். மையம் முன்பு கிருஷ்ணமூர்த்தி உட்கார்ந்தார். சிறிதுநேரத்தில் அங்கேயே அவர் மயங்கினார்.
தன்னை தூக்கி சுமந்தபடி வந்த தந்தை, தனது கண் எதிரெ திடீரென மயங்கி கிடந்ததை கண்ட சிறுவனுக்கு எதுவும் புரியவில்லை. இதனால் சிறுவன் தனது தந்தையை தட்டி எழுப்பியப்படி அப்பா... அப்பா... என்று கதறி கொண்டிருந்தான்.
நெஞ்சை நெகிழ செய்த காட்சி
மயங்கி கிடந்தவரின் அருகே, சிறுவன் ஒருவன் தன்னந்தனியாக அழுது கொண்டிருந்த காட்சியை அப்பகுதி மக்கள் கண்டனர். மழலையின் கதறல் காட்சி, காண்போரின் கண்களை குளமாக்கியது.
நெஞ்சத்தை நெகிழ செய்த இந்த காட்சியை கண்ட அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். பின்னர் மயங்கி கிடந்த கிருஷ்ணமூர்த்தியை தட்டி எழுப்பினர். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை.
மாரடைப்பால் சாவு
இதனையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை இறந்தது தெரியாமல் தட்டி எழுப்பியப்படி 3 வயது சிறுவன் கதறிய காட்சி கல் நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது.

Next Story