மும்பையில் குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி கைது தமிழக கர்நாடக எல்லையில் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்
மும்பையில் குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியை ஓசூர் அருகே தமிழக கர்நாடக எல்லையில் போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்,:
மும்பையில் குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியை ஓசூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் போலீசார் கைது செய்தனர்.
குற்ற வழக்கு
மராட்டிய மாநிலம் மும்பையில் கொள்ளை, கொலை, ஆள்கடத்தல், போதை பொருள் விற்பனை உள்ளிட்ட 37-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் அப்துல் ஆசிப் என்கிற இலியாஸ். பிரபல ரவுடியான இவர் நீண்ட நாட்களாக போலீசாரிடம் சிக்காமல் இருந்து வந்தார். மேலும் அவர் மும்பையில் தலைமறைவாகி இருந்தார். அவரை மும்பை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் ஓசூர் அருகே தமிழக- கர்நாடக எல்லையில் தனியார் தொழிற்சாலை அருகே தனியார் விடுதியில் அவர் அறை எடுத்து தங்கி இருந்து வந்துள்ளார். இவர் மத்திகிரி பகுதியில் நடைபெற்ற இருசக்கர வாகன பந்தயத்தையும் கண்டு ரசித்து சென்றதாக கூறப்படுகிறது.
ரவுடி கைது
இதுகுறித்து மும்பை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அத்திப்பள்ளி போலீசார் உதவியுடன் விடுதியில் தங்கி இருந்த ரவுடி அப்துல் ஆசிப் என்கிற இலியாசை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து தோட்டாக்களுடன் ஒரு கைத்துப்பாக்கி, செல்போன்கள், சிம் கார்டுகள், 5 பென் டிரைவ் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். பின்னர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் விஸ்வநாத் தலைமையில் போலீசார், ரவுடியை அத்திப்பள்ளி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று மும்பை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story