வனவிலங்குகளின் தாகம் தணிக்க அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் மின்வாரியத்துக்கு வனத்துறை கடிதம்

வன விலங்குகளின் தாகம் தணிக்க அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று மின்வாரியத்திற்கு வனத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர்.
கூடலூர்
வனவிலங்குகளின் தாகம் தணிக்க அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று மின்வாரியத்திற்கு வனத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர்.
கடும் வறட்சி
முதுமலை புலிகள் காப்பகத்தின் உள் மண்டலத்தில் கார்குடி, முதுமலை, தெப்பக்காடு சரக பகுதியும், வெளி மண்டலத்தில் மசினகுடி, சிங்காரா, சீகூர், நீலகிரி மேற்கு பள்ளத்தாக்கு சரக பகுதிகளும் உள்ளது.
தற்போது கோடைகாலம் என்பதால் வெளி மண்டல பகுதியான சிங்காரா, சீகூர் சரகத்தில் கோடை வறட்சியின் தாக்கம் அதிகம் உள்ளது. இதன் காரணமாக நீர்நிலைகள் வறண்டுவிட்டன.
அத்துடன் காட்டு யானை, மான், காட்டெருமைகளுக்கு பசுந்தீவனம் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. அத்துடன் வனவிலங்குகள் தாகம் தணிக்க தண்ணீர் தேடி குடியிருப்புக்குள் புகுந்து வருகிறது.
தண்ணீர் திறக்க கடிதம்
இந்த நிலையில் வனப்பகுதியில் கோடை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஊட்டி, கோத்தகிரி பகுதியில் மட்டும் மழை பெய்தது. வனப்பகுதியில் மழை பெய்யவில்லை.
இதன் காரணமாக சிங்காரா, சீகூர் வனச்சரக பகுதியில் உள்ள வனவிலங்குகள் தண்ணீர் தேடி அலைந்து வருகிறது.
எனவே இந்த வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் தாகம் தீர்க்கும் வகையில் பைக்காரா, காமராஜ் சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குந்தா மின் வாரிய நிர்வாகப் பொறியாளருக்கு முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண் கடிதம் அனுப்பி உள்ளார். இதுகுறித்து வன அதிகாரிகள் கூறியதாவது:-
வனவிலங்குகள் தாகம் தீர்க்கும்
புலிகள் காப்பகத்தில் உள்ள கார்குடி, முதுமலை தெப்பக்காடு சரக பகுதி களில் வறட்சியின் தாக்கம் சற்று குறைவாக உள்ளது. ஆனால் மசினகுடி, சிங்காரா, சிகூர் சரக பகுதியில் வறட்சி மிக அதிகமாக நிலவுகிறது.
இதனால் பைக்காரா, காமராஜ் சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்தால் இந்த வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரும் இதன் காரணமாக இங்குள்ள வனவிலங்குகள் தாகம் தணிக்க ஏதுவாக இருக்கும்.
எனவே அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story