மதுபாரில் வாலிபரை கத்தி,பாட்டிலால் குத்திக்கொன்ற 2 பேர்


மதுபாரில் வாலிபரை கத்தி,பாட்டிலால் குத்திக்கொன்ற 2 பேர்
x
தினத்தந்தி 11 March 2022 1:47 AM IST (Updated: 11 March 2022 1:47 AM IST)
t-max-icont-min-icon

பாரில் வாலிபரை கத்தி, மதுபாட்டிலால் குத்திக்கொன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர், 
பாரில் வாலிபரை கத்தி, மதுபாட்டிலால் குத்திக்கொன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்விரோதம் 
விருதுநகர் அருகே உள்ள இனாம்ரெட்டியபட்டியை சேர்ந்தவர் ராமர் (வயது 35). டிராக்டர் டிரைவரான இவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த ராஜேசுவரன் (32) என்ற ஆட்டோ டிரைவருக்கும் இடையே  முன்விரோதம் இருந்து வந்தது. 
சில தினங்களுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமியின் (27) தந்தை மாரியப்பன் சட்டைப்பையில் இருந்த பணம் திருட்டு போனது தொடர்பாக ராமருக்கும், கருப்பசாமிக்கும் இடையே  ஏற்பட்ட பிரச்சினையில் கருப்பசாமி, ராமரை கத்தியால் குத்த முயன்றார். அப்போது அருகில் இருந்தவர்கள் அவர்களை விலக்கி விட்டனர். 
மதுபாட்டிலால் குத்து 
இந்தநிலையில் ராமர் நேற்று முன்தினம் இரவில் விருதுநகர் தரகம்பட்டி ரோட்டில் உள்ள ஒரு தனியார் மது பாரில், மது குடித்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கும், அங்கு வந்த ராஜேசுவரன், கருப்பசாமி ஆகியோருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.  தகராறு முற்றியதில் கருப்பசாமி கத்தியாலும், ராஜேசுவரன் மது பாட்டிலை உடைத்தும் ராமரை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். 
இதுகுறித்து தகவலறிந்த சூலக்கரை போலீசார் விரைந்து வந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த ராமரை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
2 பேர் கைது 
 ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராமர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ராமரின் மனைவி ரம்யா கிருஷ்ணா (27) கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசுவரன், கருப்பசாமி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story