கச்சத்தீவில் தமிழக-இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை

கச்சத்தீவில் தமிழக, இலங்கை மீனவர்கள் பிரதிநிதிகள் சந்தித்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த கூட்டம் இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடந்தது. அப்போது தமிழக படகுகளை விடுவிக்க வலியுறுத்தப்பட்டது.
ராமேசுவரம்,
கச்சத்தீவில் தமிழக, இலங்கை மீனவர்கள் பிரதிநிதிகள் சந்தித்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த கூட்டம் இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடந்தது. அப்போது தமிழக படகுகளை விடுவிக்க வலியுறுத்தப்பட்டது.
மீனவர்கள் சந்திப்பு
கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் ஆலயத்திருவிழாவில் தமிழக-இலங்கையை சேர்ந்த இருநாட்டு மீனவர்களும் கலந்து கொண்டனர். அப்போது, இருதரப்பு மீனவர்கள் சந்திப்புக்கும், ஆலோசனை கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இலங்கை கடல் தொழில் துறை மந்திரி டக்ளஸ் தேவானந்தா இதற்கு தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பாக ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் சேசுராஜா, சகாயம், எமரிட், நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் எஸ்.பி.ராயப்பன், பாரம்பரிய மீனவர் சங்க கூட்டமைப்பு நிர்வாகி நல்லதம்பி மற்றும் இலங்கை வடமாகாண மீனவ பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழகத்தின் சார்பாக கலந்து கொண்டவர்கள் பேசியதாவது:-
தொப்புள்கொடி உறவு
இந்தியா-இலங்கை நாடுகள் தொப்புள் கொடி உறவாகவும், நட்பு நாடுகளாகவும் உள்ளன. .ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மீனவர்கள் பிரச்சினை அதிகமாக உள்ளது. 1983-ம் ஆண்டுக்கு முன்பு வரையிலும் இருநாட்டு மீனவர்களும் எந்தவித பிரச்சினையும் இல்லாமல்தான் மீன்பிடித்து வந்துள்ளோம்.
ராமேசுவரத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இந்திய கடல் எல்லைப்பகுதி முடிவடைகின்றது. மிக, மிக குறுகிய கடல் பகுதியில் மீன்பிடிப்பது என்பது மிகவும் கஷ்டமான சூழ்நிலை ஆகும். இலங்கை மீனவர்களுக்கு பிரச்சினை ஏற்படாத வகையில் எங்கள் தரப்பு மீனவர்கள் மீன்பிடிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் மனிதாபிமான அடிப்படையில் விரைவில் விடுதலை செய்யப்பட்டு வருவதையும் வரவேற்கிறோம். அதேநேரத்தில் கடந்த சில வருடங்களாக தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்காமல் அரசுடமையாக்கப்பட்டு ஏலம் விடப்படுகின்றன.
நிரந்தர தீர்வு
மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய படகுகளை இதுபோன்று விடுவிக்காமல் ஏலம் விடும் நடவடிக்கை ஒட்டுமொத்த தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க கடல் தொழிலாளர் துைற மந்திரி, இலங்கை அரசிடம் பேசி பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழக மீனவர்களின் விருப்பமும் கோரிக்கையும் ஆகும். அதுபோல் அடுத்த கட்டமாக நடைபெறும் இந்த இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தையில் நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே தமிழக மீனவர்களின் விருப்பமாகவும் உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை வடமாகாண மீனவர் சங்க பிரதிநிதி ஒருவர் பேசுகையில், “ தமிழக மீனவர்களின் மீன்பிடிப்பால் இலங்கை மீனவர்களின் வலைகள் சேதப்படுத்தப்படும் நிகழ்வுகள் நடக்கிறது. எனவே தமிழக மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலை மீன்பிடிப்பை நிறுத்த வேண்டும்”, என்றார்.
இலங்கை மந்திரி தகவல்
இந்த கூட்டத்தில் இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா பேசியதாவது:-
இருநாட்டு மீனவர்கள் பிரச்சினை குறித்து முழுமையாக எனக்கு தெரியும். இருந்தாலும் இந்த கலந்துரையாடல், ஆலோசனை கூட்டத்தில் இரு நாட்டு மீனவர்களுக்கும் நடுநிலையாகவே செயல்பட முடியும். இருநாட்டு மீனவர்கள் பிரச்சினை குறித்து இந்த மாத இறுதியில் இலங்கையில் இருநாட்டு அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. அதன்பின்னர் இரு நாட்டு அமைச்சர்கள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இந்த பேச்சுவார்த்தையில் நீண்ட காலமாக உள்ள இந்த மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story