புதுக்கோட்டையில் 6 வீடுகளில் தீ விபத்து
புதுக்கோட்டையில் 6 வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டதில் பொருட்கள், உடைமைகள் எரிந்து நாசமாகின.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாலையீடு பகுதியில் குடியிருப்புகள் அதிகமாக உள்ளன. அதில் குடிசைகளும் அடங்கும். இந்தநிலையில் முருகானந்தத்தின் மனைவி லட்சுமி என்பவரது குடிசையில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது. இதனால், வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். இந்த தீ, அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. அந்த வீடுகளில் இருந்தவர்களும் உடனடியாக வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். பின்னர், தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பொருட்கள் எரிந்து நாசம்
ஆனாலும், தீ கட்டுக்குள் வராததால் புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், தீயணைப்பு நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரி சூசைமாணிக்கம் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து கடுமையாக போராடி தீயை அணைத்தனர். தீயை முழுமையாக அணைக்க 2 வண்டிகளின் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது.
இந்த தீ விபத்தில் முருகேசன், மாரிமுத்து, சுப்பையா, லட்சுமி ஆகியோரது 4 குடிசைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. முத்துகாசிநாதன், சுப்பம்மாள் ஆகியோரது ஓட்டு வீடுகளின் ஒரு பகுதி தீயில் பாதிக்கப்பட்டன. இந்த தீ விபத்தில் வீடுகளில் இருந்த டி.வி., பீரோ, பிரிட்ஜ் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், உடைமைகள், ஆவணங்கள் எரிந்து நாசமாகின. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
மின்கசிவு காரணமா?
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் முத்துராஜா எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் திலகவதி செந்தில்குமார், நகராட்சி ஆணையர் நாகராஜன், தாசில்தார் செந்தில்குமார், மாவட்ட உதவி தீயணைப்பு அதிகாரி கார்த்திகேயன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியை துரிதப்படுத்தினர்.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் கட்டமாக நிவாரண உதவி தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் வழங்கப்பட்டது. அப்போது அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story