தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 2,897 வழக்குகளுக்கு தீர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 2,897 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.சுமதி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் 6 அமர்வுகளும், கோவில்பட்டியில் 2 அமர்வுகளும், திருச்செந்தூர், விளாத்திகுளம், சாத்தான்குளம் மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் தலா ஒரு அமர்வு என மொத்தம் 12 அமர்வுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் சமாதானமாக செல்லக் கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மணவாழ்க்கை சம்மந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வழக்குகளில் வங்கி வாராக்கடன் வழக்குகளில் 203 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு அதில் 98 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. அதன் மொத்த தீர்வு தொகை ரூ.ஒரு கோடியே 18 லட்சத்து 76 ஆயிரத்து 535 ஆகும். மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 2 ஆயிரத்து 884 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதில் 2 ஆயிரத்து 799 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.4 கோடியே 46 லட்சத்து 50 ஆயிரத்து 541 இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 87 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு அதில் 2 ஆயிரத்து 897 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 கோடியே 65 லட்சத்து 27ஆயிரத்து 76 இழப்பீடாக வழங்கப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பீரித்தா செய்திருந்தார்.
Related Tags :
Next Story