திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம்


திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம்
x
தினத்தந்தி 14 March 2022 12:04 AM IST (Updated: 14 March 2022 12:04 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதனால் திருவாரூர் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

திருவாரூர்:
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதனால் திருவாரூர் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. 
ஆசியாவிலேயே பெரிய தேர்
திருவாரூரில் தியாகராஜர் கோவில் உள்ளது. சைவ தலங்களில் பழமை வாய்ந்த கோவிலான இக்கோவில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகும். பல்வேறு சிறப்புகளை கொண்ட திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான தேரை, ஆழித்தேர் என அழைக்கிறார்கள். 
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை ஆழித்தேருக்கு உண்டு. அலங்கரிக்கப்படாத இந்த தேரின் உயரம் 30 அடி, அகலம் 30 அடி ஆகும். தேரின் விமான பகுதி வரை தேர் சிலைகளால் அலங்கரிக்கப்பட்ட பகுதி 48 அடி, விமான கலசம் 12 அடி என மொத்தம் 96 அடி உயரத்துடன் ஆழித்தேர் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும். 
வியக்க வைக்கும் பிரம்மாண்டம்
திருவாரூர் ஆழித்தேர் இதர கோவில்களின் தேர்களில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டது. 24½ அடி நீளம், 1½ அடி உயரம் கொண்ட 2 இரும்பு அச்சுக்கள், 9 அடி விட்டமும், 1½ அடி அகலமும் உடைய 4 இரும்பு சக்கரங்கள் என தேரின் பிரம்மாண்டம் வியக்க வைக்கிறது. 
தேரின் மேல் கலை பொக்கிஷங்கள் ஏராளமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. எண் கோண வடிவமாக அமைந்துள்ள தேர், குறுக்கு வெட்டு தோற்றத்தில், 20 பட்டைகளாக காணப்படும்.
300 டன் எடை
திருச்சி பெல் நிறுவனம் சார்பில் இரும்பு அச்சுகள், 4 இரும்பு சக்கரங்களுடன் எளிதில் நிறுத்தும் வகையில் ஹைட்ராலிக் பிரேக் தேரில் பொருத்தப்பட்டு உள்ளது. மரத்தேரின் எடை 220 டன். இதன் மீது பனஞ்சப்பைகள் 5 டன், மூங்கில் 50 டன், சவுக்கு 10 டன், கயிறு ஒரு டன், துணிகள் ½ டன், தேரின் முன்புறம் கட்டப்படும் 4 குதிரைகள், யாளி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்ட நிலையில் தேரின் மொத்த எடை 300 டன்னாகும்.
வடங்கள்
தேரை இழுக்க சுமார் 21 அங்குலம் சுற்றளவு கொண்ட 425 அடி நீளம் கொண்ட 4 வடங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் எடை 4 டன். அஜபா நடனத்துடன் கோவிலில் இருந்து தியாகராஜர் புறப்பட்டு தேரில் எழுந்தருள்வார். ஆழித்தேர் வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்பது ஐதீகம்.
திருவாரூர் வீதிகளில் ஆழித்தேர் அசைந்தாடி வரும் அழகை தரிசிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் ஆழித்தேரோட்ட விழா திருவாரூரில் விமரிசையாக கொண்டாடப்படும். 
விழாக்கோலம்
இந்த சிறப்புமிக்க ஆழித்தேராட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. முன்னதாக நாளை காலை 5 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து 8.10 மணிக்கு ஆழித்தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்ட விழா நடைபெறுகிறது. 
விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் மற்றும் அரசின் இதர துறையினரும் இணைந்து செய்து வருகின்றனர். ஆழித்தேரோட்டம் காரணமாக திருவாரூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

Next Story