ஓ.என்.ஜி.சி.க்கு கொடுத்துள்ள அனுமதியை அரசு ரத்து செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

காவிரி டெல்டாவில் புதிய 9 ஹைட்ரோ கார்பன் எண்ணெய் கிணறுகளை தோண்ட ஓ.என்.ஜி.சி.க்கு கொடுத்துள்ள அனுமதியை அரசு ரத்து செய்ய வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கரூர்,
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூரில் திங்கட்கிழமை தோறும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் திங்கட்கிழமைதோறும் நடத்தப்பட்டு வரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் பொதுமக்கள் தங்களது மனுக்களை அளிக்க புகார்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை பெட்டியில் போட்டு சென்றனர்.
ஹைட்ரோ கார்பன் எண்ணெய் கிணறுகள்
இதில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வேளாண்மை என்பது மாநில அரசின் பட்டியலில் உள்ளது. வேளாண்மையை பாதுகாக்க தமிழக அரசு அறிவித்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஓ.என்.ஜி.சி-க்கு அனுமதி என்பது தமிழகத்தின் இறையாண்மையை பறிக்கும் செயலாகும். தமிழக அரசால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என 2020-ல் அறிவிக்கப்பட்டுள்ள காவிரி டெல்டாவில், தமிழக இறையாண்மையை மீறி புதிய 9 ஹைட்ரோ கார்பன் எண்ணெய் கிணறுகளை தோண்ட மத்திய அரசு ஓ.என்.ஜி.சி.க்கு கொடுத்துள்ள அனுமதியை தமிழக அரசு தனது எதிர்ப்பை தெரிவித்து உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
ஓ.என்.ஜி.சி.-யை காரணம் காட்டி மறைமுகமாக காவிரி டெல்டாவில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட கனிம வளங்களை எடுக்க ஸ்டெர்லைட் வேதாந்தாவை நுழைக்க மத்திய அரசு நடத்தும் முயற்சியை தமிழ்நாடு அரசு விழிப்புடன் இருந்து முறியடிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பன்னோக்கு பணியாளர்கள்
பன்னோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் கோவிட் வார்டுகளில் பணியாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்பனர்கள், பன்னோக்கு பணியாளர்கள் என ஆயிரக்கணக்கானோரை நேரடியாகவும், வெளிமுகமை அடிப்படையிலும் தமிழக அரசு நியமனம் செய்தது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் பன்னோக்கு மருத்துவமனை பணியாளர்களாக உள்ள நாங்கள் கோவிட் வார்டுகள் என்ற வரையறையை தாண்டி ஒட்டு மொத்த இதர மருத்துவமனை பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிர்ணயிக்கப்பட்ட மருத்துவ பணியாளர்கள் இல்லாத நிலையில் தற்போது பன்னோக்கு மருத்துவமனை பணியாளர்களாக உள்ள நாங்கள் அதை ஈடுகட்டும் வகையில் பணிபுரிந்து வருகிறோம். எங்களுக்கு பணி நீட்டிப்பு தொடர்ந்து செய்யப்பட்டு வந்தும்கூட, திடீரென 13.03.2021-லிருந்து பணி வழங்க மறுக்கப்பட்டுள்ளது. எங்களது வாழ்வாதாரம் பறிக்கப்பட்டதால் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதோடு, எதிர்கால வாழ்க்கை நிலைமை பெரும் கேள்விக் குறியாகி உள்ளது.
இந்நிலையில் கடந்த 3 மாத ஊதியமும் எங்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. கடந்த 2020-ல் நியமிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட நாங்கள் தொடர்ந்து பணிபுரியவும், எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய 2021 டிசம்பர் முதல் 2022 பிப்ரவரி மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படவும் தாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
சோலார் மின் கம்பங்கள்
க.பரமத்தி ஒன்றியம், நடந்தை வடக்கு, ஆதிதிராவிடர் காலனி, வேட்டையார்பாளையம் ஊர்பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். எங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கூடலூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தர்மகோடங்கிப்பட்டி எனும் கிராமத்தில் இருந்து ஆண்டிச்செட்டிபாளையம் துணைமின்நிலையத்திற்கு எங்கள் கிராமம் வழியாக தனியார் நிறுவனத்தின் சோலார் மின் கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கோடந்தூர் பகுதியில் இருந்து எங்கள் கிராமம் வழியாக மின்கம்பங்கள் அமைத்திருக்கிறார்கள். தற்போது இந்த நிறுவனத்தின் மின்கம்பங்களும், ஏற்கனவே இருக்கும் மின்கம்பங்களுக்கு மிக அருகில் அமைத்திருக்கிறார்கள். தற்போது இந்த இரண்டு மின்கம்பங்களும் குறுகிய சாலைகளின் இருபுறமும் அமைந்திருக்கிறது. எங்கள் கிராமத்தின் அருகில் கல்குவாரி இயங்கி வருகிறது. அந்த கல்குவாரியின் கனரக வாகனங்கள் இரவு பகல் என அடிக்கடி சென்று கொண்டிருப்பதால் மற்றவர்கள் செல்லும் போது ஒதுங்குவதற்கு கூட இடம் இல்லை, விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வாகனங்கள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. இந்த மனுவை ஏற்று எங்களுக்கு எந்தவித இடையூறு ஏற்படாத வகையில் மின்கம்பங்கள் அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story