புதிதாக அரசு நெல் கொள்முதல் நிலையம்- சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்
நெல்லை அருகே கீழத்திடியூரில் புதிதாக அரசு நெல் கொள்முதல் நிலையத்தை சபாநாயகர் மு.அப்பாவு திறந்து வைத்தார்.
நெல்லை:
நெல்லை அருகே கீழத்திடியூரில் புதிதாக அரசு நெல் கொள்முதல் நிலையத்தை சபாநாயகர் மு.அப்பாவு திறந்து வைத்தார்.
நெல் கொள்முதல் நிலையம்
நெல்லை மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி அரசு சார்பில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இதையொட்டி நெல்லை அருகே உள்ள திடியூர் ஊராட்சி கீழத்திடியூர் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.
விழாவிற்கு நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் தலைமை தாங்கினார். ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
சபாநாயகர் திறந்து வைத்தார்
சபாநாயகர் மு.அப்பாவு, நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் நெல்மணிகளை கொள்முதல் செய்ய தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார். அதன்படி கீழத்திடியூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இது சாமானிய, ஏழை, எளிய மக்களின் அரசு ஆகும்.
நெல் கொள்முதல் செய்வதற்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்வது, விவசாயிகள் பெயரில் வேறு நபர்கள் ஏமாற்றம் செய்துவிடக் கூடாது என்பதை தடுப்பதற்கும், உண்மையான விவசாயிகள் பயன் அடைவதற்குமே இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. நெல்லை அருகே உள்ள மேலத்திடியூர், தமிழாகுறிச்சியில் பகுதி நேர ரேஷன் கடைகள் கேட்டு உள்ளீர்கள். அதை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். பச்சையாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை சேதமடைந்து விட்டதால் தமிழாகுறிச்சி குளத்துக்கு தண்ணீர் வராமல் விவசாயிகள் சிரமப்படுவதாக தெரிவித்துள்ளீர்கள். இதுதொடர்பாக ரூ.1½ கோடியில் புதிய தடுப்பணை கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளேன். விரைவில் நிதி ஒதுக்கீடு செய்து தடுப்பணை அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்துகொண்டவர்கள்
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், களக்காடு நகராட்சி துணைத்தலைவர் பி.சி.ராஜன், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணைத்தலைவர் இசக்கி பாண்டியன், வேளாண் துறை இணை இயக்குனர் கஜேந்திர பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story