பாதியில் நிற்கும் தொகுப்பு வீடு கட்டுமான பணிகள் ஆதிவாசி மக்கள் கடும் அவதி


பாதியில் நிற்கும் தொகுப்பு வீடு கட்டுமான பணிகள் ஆதிவாசி மக்கள் கடும் அவதி
x
தினத்தந்தி 15 March 2022 9:12 PM IST (Updated: 15 March 2022 9:12 PM IST)
t-max-icont-min-icon

மாங்கோடு அருகே ஆதிவாசி காலனியில் தொகுப்பு வீடு கட்டுமான பணி கள் பாதியில் நிற்கிறது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.

பந்தலூர்

மாங்கோடு அருகே ஆதிவாசி காலனியில் தொகுப்பு வீடு கட்டுமான பணி கள் பாதியில் நிற்கிறது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். 

ஆதிவாசி காலனி 

பந்தலூர் தாலுகா மாங்காடு அருகே திருவம்பாடியில் ஆதிவாசி காலனி உள்ளது. இங்கு 40-க்கும் மேற்பட்ட ஆதிவாசி குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு 20-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அவை அனைத்துமே குடிசை வீடுகள் என்பதால், அவை பழுதாகி இருந்தது. 

எனவே அங்கு புதிய வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று அந்தப்பகுதியை சேர்ந்த ஆதிவாசி மக்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். இதையடுத்து அங்கு தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். 

தொகுப்பு வீடுகள் கட்டும் பணி

இதை தொடர்ந்து இந்த காலனியில் கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த ஆதிவாசி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் திடீரென்று அங்கு கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன. 

இதனால் அங்கு வசித்து வரும் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்படாததால் அவர்கள் மீண்டும் குடிசைகளில் தங்கி இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. 

எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தொகுப்பு வீடுகள் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது குறித்து அந்தப்பகுதியை சேர்ந்த ஆதிவாசி மக்கள் கூறியதாவது:- 

விரைவில் முடிக்க வேண்டும்

அரசு சார்பில் கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகளின் பணி பாதியிலேயே நிற்கிறது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் அவர்கள் சரியான பதிலை சொல்லுவது இல்லை. நாங்கள் வசித்து வரும் குடிசை வீடுகள் பழுதடைந்துவிட்டது. 

இதற்கிடையே இன்னும் சில வாரங்களில் இங்கு பருவமழை தொடங்கி விடும். அவ்வாறு தொடங்கினால் நாங்கள் வசித்து வரும் குடிசை வீடுகளுக்குள் தண்ணீர் வந்துவிடும். எனவே அதற்குள் தொகுப்பு வீடுகளின் கட்டுமான பணியை முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story