சக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்

சக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்
முத்தூர்:
நத்தக்காடையூர் அருகே பழைய வெள்ளியம்பாளையம் சக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சக்தி விநாயகர் கோவில்
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழைய வெள்ளியம்பாளையத்தில் சக்தி விநாயகர் கோவில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு கோபுர கலை வண்ணம் தீட்டி அழகிய வேலைப்பாட்டுடன் கட்டப்பட்டு உள்ளது. இக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்றுகாலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்கப்பட்டு விநாயகர் பூஜை நடத்தப்பட்டு கோபுர கலசம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தொடர்ந்து காலை 5.30 மணிக்கு முதல் கால யாக வேள்வி பூஜை நடத்தப்பட்டு, விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணிக்கு பக்தர்கள் கோவிலில் இருந்து புறப்பட்டு கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். பின்னர் மாலை 6 மணிக்கு நத்தக்காடையூர் மாரியம்மன் கோவிலில் இருந்து கடைவீதி வழியாக பழைய வெள்ளியம்பாளையம் சக்தி விநாயகர் கோவிலுக்கு மேளதாளத்துடன் காவிரி தீர்த்த கலசத்துடன் பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்.
கும்பாபிஷேகம்
நேற்று காலை 4 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன், 2-ம் கால யாக பூஜை நடத்தப்பட்டு, தீபாராதனை கலசங்கள் யாக சாலையில் இருந்து மூலாலயம் புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து காலை 6.15 மணிக்கு விமான கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் 6.30 மணிக்கு சக்தி விநாயகர், நீரூற்று விநாயகர் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து காலை 7.15 மணிக்கு சக்தி விநாயகர், நீரூற்று விநாயகர், நாகர் உள்பட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய பட்டாடை உடுத்தப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதங்கள், அன்னதானம், மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை பழைய வெள்ளியம்பாளையம் சக்தி விநாயகர் கோவில் திருப்பணி கமிட்டி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story