காலி பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலில் தண்ணீர் குடித்த சிறுவன் சாவு

திருமருகல் அருகே வயலில் கிடந்த காலி பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலில் தண்ணீர் குடித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
திட்டச்சேரி;
திருமருகல் அருகே வயலில் கிடந்த காலி பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலில் தண்ணீர் குடித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு
காலி பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கிடாமங்கலம் மேலத்தெருவை சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மனைவி சாவித்திரி. இவர்களது மகன் மகேஸ்வரன்(வயது 12). 6-ம் வகுப்பு மாணவனான மகேஸ்வரன், சம்பவத்தன்று தனது தாத்தா பக்கிரிசாமியுடன் சேர்ந்து அருகே உள்ள பருத்தி வயலுக்கு சென்றான்.
வயலுக்கு சென்ற மகேஸ்வரனுக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது. அப்போது வயலில் கிடந்த காலி பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலை எடுத்த மகேஸ்வரன் அங்கிருந்த குடத்தில் இருந்த தண்ணீரை காலிபூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலில் நிரப்பி குடித்தான்.
பாிதாப சாவு
இதனால் வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுவன் மகேஸ்வரனை சிகிச்சைக்காக திருமருகல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரி மற்றும் திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி ஆகியவற்றில் சிகிச்சைக்காக சேர்க்ப்பட்டான்.
பின்னர் அங்கிருந்து சிறுவன் மகேஸ்வரனை தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தான்.
சோகம்
இது குறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வயலில் கிடந்த காலி பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலில் தண்ணீர் குடித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் கிடாமங்கலம் பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Related Tags :
Next Story