ஆடுதுறை பேரூராட்சி தலைவர்-துணைத்தலைவர் தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெறும் என அறிவிப்பு


ஆடுதுறை பேரூராட்சி தலைவர்-துணைத்தலைவர் தேர்தல்  வருகிற 23-ந் தேதி நடைபெறும் என அறிவிப்பு
x
தினத்தந்தி 17 March 2022 12:15 AM IST (Updated: 16 March 2022 11:30 PM IST)
t-max-icont-min-icon

ஆடுதுறை பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருவிடைமருதூர்:-

ஆடுதுறை பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

தேர்தல் ஒத்தி வைப்பு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சியில் கடந்த 4-ந் தேதி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேர் வரவில்லை. மொத்தம் உள்ள 15 கவுன்சிலர்களில் 12 பேர் மட்டுமே வந்திருந்தனர். இந்த நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர், தலைவர் தேர்தலை நடத்த முன்வந்தபோது தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் தலைவர் தேர்தலுக்கான படிவங்களை கிழித்தெறிந்தனர். இதனால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. 
தேர்தலுக்கான படிவங்களை கிழித்தது தொடர்பாக தி.மு.க. கூட்டணி கவுன்சிலர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 

ஐகோர்ட்டில் வழக்கு

இந்த நிலையில் போலீஸ் பாதுகாப்பு அளித்து, வீடியோ பதிவுடன் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என பா.ம.க. கவுன்சிலர்கள் 4 பேர், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேர், சுயேச்சைகள் 2 பேர் என மொத்தம் 8 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இந்த நிலையில் வருகிற 26-ந் தேதி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலை நடத்த இருப்பதாக கூறி, கோர்ட்டில் தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்தது. 
இதனிடையே மனுதாரர்கள் தரப்பில், தங்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்து விட்டு, தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதனால், உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிடும்படியும் கோர்ட்டில் முறையிடப்பட்டது. 

23-ந் தேதி தேர்தல்

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆடுதுறை பேரூராட்சியின் 15 கவுன்சிலர்களுக்கும் தலைவர், துணைத்தலைவர் தேர்தல் கூட்டம் நடத்துவதற்கான அறிவிப்பு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அதில், ‘வருகிற 23-ந் தேதி (புதன்கிழமை) தேர்தல் கூட்டம் நடத்தப்படும். அன்று காலை 9.30 மணிக்கு தலைவர் தேர்தலும், மதியம் 2.30 மணிக்கு துணைத்தலைவர் தேர்தலும் நடக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி சட்டங்களின்படி தலைவர், துணைத்தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. 
எனவே இந்த பதவியிடங்களுக்கு அனைத்து பிரிவினரும் போட்டியிடலாம். 2006-ம் ஆண்டு தமிழ்நாடு பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி தேர்தல்கள் விதிகளின்படி கூட்டம் நடத்தப்படும். 
ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சி அலுவலக கட்டிடத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தவறாது அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும்’ என தேர்தல் நடத்தும் அலுவலரும், பேரூராட்சி செயல் அலுவலருமான இளவரசன் கூறி உள்ளார். 

தேர்தல் ஆணையம் அறிவிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விடுபட்ட தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் 26-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில் ஆடுதுறை பேரூராட்சியில் தலைவர், துணைத்தலைவர் தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story