காளிப்பட்டியில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்; முதியவர் பலி, கணவன்-மனைவி உள்பட 3 பேர் படுகாயம்

காளிப்பட்டியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் முதியவர் பலியானார். கணவன்-மனைவி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மல்லசமுத்திரம்:
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள சின்னகொல்லப்பட்டி பெரும்பாறைகாட்டை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 65). கூலித்தொழிலாளி. இவருடைய பேரன் ராகேஷ் (25). நேற்று ரங்கசாமி, ராகேசுடன் காளிப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை ராகேஷ் ஓட்டினார்.
அப்போது மல்லசமுத்திரம் நந்தவனதெருவை சேர்ந்த கோபால் (25), இவருடைய மனைவி பேபி ஆகியோர் எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். காளிப்பட்டியில் 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராத விதமாக திடீரென நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் ரங்கசாமி, ராகேஷ், கோபால், பேபி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
முதியவர் பலி
அந்த வழியாக சென்றவர்கள் 4 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் முதியவர் ரங்கசாமி பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்த மல்லசமுத்திரம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று, படுகாயம் அடைந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் ரங்கசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சைலேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story