ஜாமீன் கேட்டு சப்-இன்ஸ்பெக்டர் மனு


ஜாமீன் கேட்டு சப்-இன்ஸ்பெக்டர் மனு
x
தினத்தந்தி 17 March 2022 12:45 AM IST (Updated: 17 March 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் ஜாமீன் கேட்டு சப்-இன்ஸ்பெக்டர் மனு

மதுரை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோரை அங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவர்களை கடுமையாக தாக்கியதில் படுகாயம் அடைந்த இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
இந்த இரட்டைக்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ. விசாரித்தது. இந்த வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனா தொற்றால் பலியானார். மீதமுள்ள 9 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் ஏற்கனவே பலமுறை தங்களுக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்தநிலையில் சிறையில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் நான் உள்பட 9 பேர் கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளோம். இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள 105 சாட்சிகளில் இதுவரை 22 பேரிடம் மட்டுமே விசாரித்து உள்ளனர். 20 மாதங்களுக்கும் மேலாக நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளோம். விசாரணை முடியும் வரை என்னை காவலில் வைத்திருப்பது சட்டவிரோதமானது. எனவே எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த மனு குறித்து சி.பி.ஐ. தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார். அடுத்தகட்ட விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

Next Story