நீலகிரியில் 2 ¼ லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை கலெக்டர் தகவல்

நீலகிரியில் 2¼ லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் தெரிவித்தார்.
ஊட்டி
நீலகிரியில் 2¼ லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் தெரிவித்தார்.
கலெக்டர் ஆய்வு
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி முதல் சனிக்கிழமை வரை தேசிய குடற்புழு நீக்க வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ஊட்டி பிங்கர்போஸ்ட் பள்ளியில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியை கலெக்டர் எஸ்.பி.அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.
இதுகுறித்து கலெக்டர் எஸ்.பி.அம்ரித் கூறியதாவது:-
இதுவரை குடற்புழு நீக்க மாத்திரை வழங்காதவர்களுக்கு வருகிற 21-ந் தேதி மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
ஒரு வயது முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கும்், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்களுக்கும், பள்ளி செல்லா குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்திலும் வழங்கப்படுகிறது.
ஒரு வயது முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை மாத்திரை அல்லது 5 மில்லி லிட்டர் அல்பெண்டசோல் திரவம், 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு ஒரு நபருக்கு ஒரு மாத்திரை வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
உடல் ஆரோக்கியம்
நீலகிரியில் அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் 2 சுற்றுகளாக 415 அங்கன்வாடி பணியாளர்கள், 212 கிராம சுகாதார செவிலியர்கள், 409 ஆஷா பணியாளர் கள் மூலம் மாத்திரைகள் நேரடியாக வழங்கப்படுகிறது.
இதன் மூலம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 224 குழந்தைகள், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்கள் 52 ஆயிரத்து 982 பேர் பயன்பெறுவார்கள். அல்பெண்டசோல் மாத்திரையை உட்கொள்வதால் குடற்புழு நீக்கம் செய்யப்படுவதுடன், ரத்த சோகை நீங்குகிறது.
நன்றாக உணவு உட்கொள்ளவும், குழந்தைகள் மற்றும் தகுதி வாய்ந்த பெண்கள் உடல் ஆரோக்கியம் பெறவும் உதவுகிறது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, ஊட்டி நகர்நல அலுவலர் ஸ்ரீதர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story