பெங்களூருவில் 45 நாளில் கட்டி முடிக்கப்பட்ட 7 மாடி கட்டிடம் - ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் திறந்துவைத்தார்

பெங்களூருவில் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் 45 நாளில் 7 மாடி கட்டிடத்தை மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று திறந்துவைத்தார்.
பெங்களூரு:
45 நாளில் 7 மாடி கட்டிடம்
மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) பெங்களூருவில் உள்ள விமானவியல் வளர்ச்சி மையத்தில் 7 மாடி கட்டிடத்தை 45 நாட்களில் கட்டி முடித்து சாதனை படைத்துள்ளது. 1 லட்சத்து 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 22-ந்தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. இருப்பினும், கட்டுமான பணி கடந்த மாதம் 1-ந்தேதிதான் தொடங்கியது. வழக்கமான கட்டுமான முறையும், ரெடிமேட் கான்கிரீட் அமைப்புகளும் இணைந்த
கலவையாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
குளு குளு வசதிகளும், தீத்தடுப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. சென்னை ஐ.ஐ.டி., ரூர்க்கி ஐ.ஐ.டி. ஆகியவை தொழில்நுட்ப ஆலோசனை அளித்துள்ளன. இந்திய விமானப்படைக்கு ஐந்தாம் தலைமுறை நடுத்தர ரக போர் விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளன. இதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக இந்த கட்டிடத்தை கட்டி உள்ளனர். விமான கட்டுப்பாட்டு வசதிகளும் அதில் செயல்படும்.
இத்தகைய சிறப்புவாய்ந்த இந்த 7 மாடி கட்டிடத்தை ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு நேற்று திறந்து வைத்தார். மேலும் கல்வெட்டையும் அவர் திறந்துவைத்தார்.
சிறப்புமிக்க திட்டம்
பின்னர் விழாவில் ராஜ்நாத்சிங் பேசியதாவது:-
நமது ராணுவத்தின் தேவைகள் அதிகரித்துள்ளது. ராணுவத்தை தொடர்ந்து நவீனப்படுத்த வேண்டியது தற்போதைய அவசியமான ஒன்று. நாம் நம்மை தயார் நிலையில் வைத்து கொள்வதற்கு முதன்மையான முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்திய ராணுவ திறனை அதிகரிக்க நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். அதற்காக உழைத்தும் வருகிறோம்.
ராணுவ படைகள், விஞ்ஞானிகள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் மக்களின் எதிர்கால மகிழ்ச்சி மற்றும் வளத்திற்காக தேவையான உதவிகளை நாங்கள் சக்தி மீறி செய்து வருகிறோம். 45 நாட்களில் 7 மாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் ஒரு சிறப்புமிக்க திட்டம் ஆகும். இது புதிய இந்தியாவின் புதிய பலத்தின் உருவம் ஆகும்.
இந்த பலம் தான், தொழில்நுட்பம், அர்ப்பணிப்பு, பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இணைந்து செயல்படுதல் ஆகும். எல்லாவற்றுக்கும் மேலாக பிரதமர் மோடி அறிவித்துள்ள தற்சார்பு இந்தியா திட்டம் நமது பலமாக உருவெடுத்துள்ளது. இன்று திறக்கப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் உள்ள வசதிகள், நமது நாட்டின் பாதுகாப்பை அதிகரிப்பதில் நீண்ட தூரம் பயணிக்கும் என்று நம்புகிறேன்.
புதிய தொழில்நுட்பம்
இந்த கட்டிடத்தில் உள்ள வசதிகள், போர் விமான விமானிகளுக்கு பயிற்சி வழங்கும். இது முக்கியமான விஷயம் ஆகும். இங்கு, விமானங்களை இயக்கும்போது இழப்புகள் ஏற்படாமல் தவறுகளை செய்து அதன் மூலம் அதனை இயக்க கற்றுக்கொள்ள பயிற்சி அளிக்கப்படும். புதிய 'ஹைபிரட்' தொழில்நுட்பம் மூலம் கட்டுமான பணியில் உற்பத்தி அதிகரிக்கும். விரயத்தால் ஏற்படும் இழப்புகள் குறையும். கட்டுமான திட்டங்களை விரைவாக முடிக்க உதவியாக இருக்கும்.
கட்டுமான துறைக்கு இந்த புதிய தொழில்நுட்பம் புதிய மைல் கல் ஆகும். வரும் நாட்களில் கட்டுமான தொழில்நுட்பங்களில் இந்தியா முன்னணி நாடாக மாறும். தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி, உற்பத்தியாக இருந்தாலும் சரி, சேவைகள் அல்லது வசதிகளாக இருந்தாலும் சரி நவீன மற்றும் துரிதமான வளர்ச்சி தான் மிக முக்கியம். அந்த பணியை செய்து வரும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தை பாராட்டுகிறேன்.
உற்பத்தி குறைவு
இந்த நிறுவனம் எதிர்காலம் சார்ந்த தொழில்நுட்பங்களை உருவாக்கினாலும், அதன் பயன் பொதுமக்களுக்கும் கிடைக்கும். பொதுவாக நமது கலாசாரமிக்க கட்டுமானத்துறை தொழிலாளர்களை அடிப்படையாக கொண்டது. அதனால் இது அதிக சிக்கலை கொண்டது. அதே நேரத்தில் உற்பத்தியும் குறைவு. ஆனால் இந்த 7 மாடி கட்டிடம் நவீன தொழில்நுட்பத்தால் கட்டப்பட்டு இருப்பது, வரும் நாட்களில் நமது உள்கட்டமைப்பு திட்டங்கள் குறைந்த செலவில் குறித்த காலத்தில் நிறைவேற்றப்படும். இதே போல் புதிய கட்டுமான தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து நாட்டை கட்டமைக்க இந்த நிறுவனம் உதவ வேண்டும்.
இவ்வாறு மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பேசினார்.
இந்த விழாவில், கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை, மந்திரிகள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story