முருகன் கோவில்களில் பங்குனி உத்திரவிழா கோலாகலம்

முருகன் கோவில்களில் பங்குனி உத்திர விழா கோலாகலமாக நடைபெற்றது. பால்குடம் எடுத்தும், காவடி சுமந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
கடலூர்,
கடலூர் வில்வராயநத்தம் 108 காவடி சுப்பிரமணியசுவாமி கோவிலில் 64-வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காவடிகளுடன் பக்தர்கள் பெண்ணையாற்றுக்கு சென்றனர். தொடர்ந்து காவடிகளுக்கு மகா அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு திரளான பக்தர்கள் காவடி எடுத்து பெண்ணையாற்றங்கரையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
இதையடுத்து மாலையில் சுப்பிரமணியசுவாமிக்கு மகா அபிஷேகம், இரவு 7.30 மணி அளவில் மகா தீபாராதனை நடந்தது. அப்போது பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று(சனிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முத்துப்பல்லக்கில் சாமி வீதி உலா நடக்கிறது.
விருத்தகிரீஸ்வரர் கோவில்
இதே போல் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. விருத்தாச்சலம் மணிமுக்தாற்றில் இருந்து பக்தர்கள் அலகுகுத்தியும், பால்குடம் மற்றும் காவடியை சுமந்தும் ஊர்வலமாக விருத்தகிரிகுப்பம் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து சாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் குப்பநத்தம், ஆலிச்சிக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திர விழா வெகு விமரிசையாக நடந்தது.
Related Tags :
Next Story