மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் கல்வி வளர்ச்சிக்கு உதவும்

தமிழக அரசின் சார்பில் 2022-23ஆண்டிற்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் கல்வி வளர்ச்சிக்கு உதவும் திட்டமாக உள்ளது என சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை,
தமிழக அரசின் சார்பில் 2022-23ஆண்டிற்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் கல்வி வளர்ச்சிக்கு உதவும் திட்டமாக உள்ளது என சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பட்ஜெட்
காமராஜ் (தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர்) - கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் தமிழக முதல்-அமைச்சர் தமிழகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்துவோம் என்றும், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை முறைப்படுத்துவோம் என்றும், சிறப்பு பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து அவர்களுக்கு முறையான ஊதியம் வழங்குவோம் என்றும் வாக்குறுதி அளித்தார். ஆனால் நேற்று பட்ஜெட் தாக்கல் அறிக்கையின் போது இதுகுறித்து எவ்வித அறிவிப்பும் அறிவிக்கவில்லை. இதனால் பெரும் ஆவலோடு எதிர் பார்த்திருந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
காரைக்கு வியாபாரி மாயாண்டி:- தமிழக அரசின் சார்பில் நேற்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட் தாக்கலில் பெரும் பாலானவற்றை வரவேற்கிறேன். அதில் தமிழக அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை வரவேற்கிறேன். ஆனால் இந்த கல்வி தொகையை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவிகளுக்கு வழங்கினால் அது அவர்களை முழுமையாக சென்றடையும். இதுதவிர மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டம், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்ந்து செயல்படும் என அறிவுப்பு செய்துள்ளதை வரவேற்கிறேன்.
மாணவர்களுக்கு சலுகைகள்
உக்ரைனில் இருந்து திரும்பிய சிங்கம்புணரி மாணவி கார்த்திகைசெல்வி:- ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையே நடக்கும் போர் காரணமாக தமிழகத்தை சே்ாந்த ஏராளா மான மருத்துவ மாணவர்கள் தற்போது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். இனி எங்களது மருத்துவ படிப்பு என்னவாகுமோ என்ற கேள்விக்குறியாக இருந்த வேளையில் தமிழக பட்ஜெட்டில் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு உள்நாட்டிலோ அல்லது பிற நாடுகளில் அவர்களின் படிப்பை தொடர தமிழக அரசு தேவையான உதவிகளை செய்யும் என அறிவித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் சிறுபான்மை தலைவர் அம்பலம் ராவுத்தர் நெய்னார்:- தமிழக அரசு நேற்று சட்ட சபையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் சிறுபான்மையினரின் கோரிக்கையாக தமிழகத்தில் உள்ள தர்காக்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க ரூ.12கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை சிறுபான்மை சமூகம் சார்பில் மனதார வரவேற்கிறேன்.
ரூ.1000
கோவிலூர் குடும்பத்தலைவி கவிதா: - தமிழக அரசின் சார்பில் 2022-23-ம் ஆண்டிற்கான நிதிநிலை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு முன்னோடியான திட்டங்களாகும். அதிலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது வரவேற்கிறேன். தமிழகத்தில் நிதிநிலை சீராகும்போது குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000வழங்குவதாக அறிவிப்பு வெளியானதை முழு மனதாக வரவேற்கிறேன். மேலும் விவசாயத்திற்கு அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் விவசாயிகளின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களாக உள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகேசன்:- தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் ஒட்டு மொத்தமாக கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. அரசுப்பள்ளியில் படித்து கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 என அறிவித்திருப்பது அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை இனி வரும் காலங்களில் அதிகரிக்கும்.15 மாவட்டங்களில் ரூ.125 கோடி செலவில் ஸ்மார்ட் வகுப்பறைகளுடன் மாதிரி பள்ளிகளை ஏற்படுத்த இருப்பது மற்றும் மாணவர்களின் திறனை மேம்படுத்த ரூ.25 கோடி ஒதுக்கி இருப்பதும் வரவேற்கத்தக்கது.
ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் நல்ல பல அறிவிப்புகளுடன் சாமர்த்தியமாக தயாரிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. சென்னை பெருநகர எல்லை விளிம்பு வரை கிழக்கு கடற்கரை சாலை ரூ.135 கோடி செலவில் 6 வழியாக மாற்றும் திட் டம், ராமநாதபுரம் நகரில் ரூ.10 கோடியில் அரசின் விரிவுபடுத்தப்பட்ட அருங்காட்சியகம் அமைக்கும் அறிவிப்பு, ஏர்வாடி தர்ஹா போன்ற சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்களை அரசு செலவில் புணரமைப்பு திட்டம், தொகுப்பு சுற்றுலா மையங்களில் ஒன்றாக ராமநாதபுரம் மாவட்டம் தேர்வு, 500 புதிய மின்சார பேருந்துகள் வாங்கும் அறிவிப்பு ஆகியவை பொதுவாக தமிழகத்துக்கும் குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்துக்கும் பயனுள்ளதாக உள்ளவை. முதல் -அமைச்சர் ஸ்டாலின் மற்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பாராட்டுகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story