நுகர்வோர் உரிமை மீறல்கள் குறித்து புகார் தெரிவிக்க வேண்டுகோள்

நுகர்வோர் உரிமை மீறல்கள் குறித்து புகார் தெரிவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. விழாவிற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், நாம் எந்த பொருளை வாங்கினாலும் அந்த பொருளில் உரிய விலை அச்சிடப்பட்டிருக்கிறதா என்றும், காலாவதியாகும் தேதி குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்றும் கண்காணிக்க வேண்டும். அதிக விலைக்கு பொருட்களை விற்றாலோ, காலாவதியான பொருட்களை விற்றாலோ உடனடியாக நுகர்வோர் அமைப்பிடம் புகார் செய்ய வேண்டிய கடமையும், உரிமையும் நமக்கு இருக்கிறது. மேலும் நுகர்வோர் உரிமை மீறல்கள் குறித்து புகார் செய்திட மாநில நுகர்வோர் சேவை மையத்தை 044-28592828 என்ற தொலைபேசி எண்ணிலும், 1967 என்ற கட்டணமில்லா எண்ணிலும், 1800 425 5901 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம், என்றார். இதைத்தொடர்ந்து உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற தலா 15 மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள், புத்தகங்கள் மற்றும் ஊக்கத் தொகையினை கலெக்டர் வழங்கி பாராட்டினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அங்கையற்கண்ணி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story