நீர்மட்டம் 15.80 அடியாக குறைந்தது குளம் போல் மாறிய பெருஞ்சாணி அணை தண்ணீர் திறப்பு நிறுத்தம்
பெஞ்சாணி அணையின் நீர்மட்டம் 15.80 அடியாக குறைந்ததையொட்டி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
குலசேகரம்,
பெஞ்சாணி அணையின் நீர்மட்டம் 15.80 அடியாக குறைந்ததையொட்டி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
கும்பப்பூ சாகுபடி
குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு இயல்புக்கு அதிகமாக பெய்த மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகள் நிரம்பி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால், கும்பப்பூ சாகுபடி நடவுப் பணிகள் தாமதமாகின.
இதையடுத்து அணைகளில் இருந்து பாசனக்கால்வாய்களில் தண்ணீர் திறப்பும் தாமதமாகியது. நடவுப் பணிகள் நிறைவடைந்த பிறகு அணைகளில் இருந்து முழு வீச்சில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்தது.
அணை மூடல்
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் திருவிழா நிறைவடைந்த பின்னர் பிப்ரவரி மாதம் இறுதியில் அணைகள் மூடப்படும். ஆனால் நடப்பாண்டில் நடவுப் பணிகள் தாமதமானதால் மார்ச் மாதம் இறுதி வரை பாசனத்திற்கு தண்ணீர் கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இதனால் அணைகளின் நீர்மட்டம் மேலும் சரிவடைந்தது. குறிப்பாக 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் நேற்று 15.80 அடியாக குறைந்தது. அணை குளம் போல் காட்சியளிக்கிறது. இதையடுத்து அணையின் மதகுகள் மூடப்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் விடுவது நிறுத்தப்பட்டது.
பேச்சிப்பாறை அணை
இந்தநிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 38.57 அடியாக இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 680 கன அடி தண்ணீர் பாசனத்திற்கு திறந்து விடப்பட்டிருந்தது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 16 அடிக்கு கீழாக குறைந்ததால் நேற்று பிற்பகல் 3 மணிக்கு அணை மூடப்பட்டது. எனினும் மொத்தமாக அணைகளில் திருப்திகரமாக அளவுகளில் தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும் வருகிற ஜூன் மாதம் கன்னிப்பூ சாகுபடிக்கு தட்டுப்பாடில்லாமல் தண்ணீர் கொடுக்க முடியும், என்றார்.
Related Tags :
Next Story