தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939278888 என்ற வாட்ஸ் அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான விவரம் வருமாறு:-
ஆபத்தான மரம்
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம்- தேன்கனிக்கோட்டை சாலையில் பேரூராட்சி வணிக வளாகம் அருகில் சாலையோரம் உள்ள புளியமரம் சமீபத்தில் தீப்பிடித்து எரிந்தது. தற்போது உருக்குலைந்து ஆபத்தான நிலையில் உள்ள இந்த புளியமரம் எந்தநேரம் வேண்டுமானாலும் கீழே விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆபத்தான இந்த புளிய மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தேவராஜ், கெலமங்கலம், கிருஷ்ணகிரி.
வேகத்தடை அவசியம்
சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் வெட்டுக்காடு பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் அருகில் வேகத்தடை இல்லாததால் சாலையை கடக்கும் பொதுமக்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் சாலையின் இருபுறமும் வேகத்தடை அமைத்து தர வேண்டும்.
-எம்.ஆனந்தராஜ், எடப்பாடி, சேலம்.
பயன்படாத குடிநீர்தொட்டி
நாமக்கல் மாவட்டம் குரும்பல மகாதேவி கிராமம் பொன்காளிவலசு பகுதியில் 2015-ம் ஆண்டு 10 ஆயிரம் லிட்டர் ெகாள்ளளவு ெகாண்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை இந்த குடிநீர் தொட்டி பயன்படுத்தப்படாமல் உள்ளது. அந்த பகுதி மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை கருத்தில் கொண்டு பயன்பாடு இல்லாத குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், பொன்காளிவலசு, நாமக்கல்.
சாலை சீரமைக்கப்படுமா?
சேலம் மாவட்டம் அக்கரபாளையம் ஊராட்சி பாலம்பட்டி விநாயகர் கோவில் அமைந்துள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. அந்த பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் மழைக்காலங்களில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையை சீரமைத்து கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், பாலம்பட்டி, சேலம்.
பூட்டியே கிடக்கும் கழிப்பறை
கிருஷ்ணகிரியில் சேலம் ரோட்டில் நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள கழிப்பறை பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் பூட்டியே இருக்கிறது. நகரின் மையப்பகுதில் அமைந்துள்ள கழிப்பறையை நகராட்சி நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்திரன், கிருஷ்ணகிரி.
கழிப்பிட வசதி இல்லாத பள்ளிக்கூடம்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட கிழக்குப் பாவடியில் தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மாணவர்களுக்கு கழிப்பிட வசதியில்லை. மேலும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் மர்ம நபர்களால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பள்ளியைச் சுற்றி குப்பைகள் குவிந்து கிடக்கிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு சுற்றுச்சுவர், கழிப்பறை கட்ட வேண்டும். குப்பைகளை அகற்றி பள்ளியை தூய்மையாக வைக்க செய்ய வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், கிழக்குப்பாவடி, சேலம்.
நிழற்கூடம் வேண்டும்
சேலம் பெத்தநாயக்கன்பாளையம் 10-வது வார்டு காந்திநகர் பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் இல்லை. இதனால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் குப்பை தொட்டி இல்லாததால் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் நிழற்கூடம் அமைக்க வேண்டும். மேலும் குப்பை தொட்டி வைத்து தூய்மையாக வைக்க செய்ய வேண்டும்.
-சரவணன், பெத்தநாயக்கன்பாளையம், சேலம்.
Related Tags :
Next Story