நவீன் ஆத்மா சாந்தி அடைய நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்-முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி


நவீன் ஆத்மா சாந்தி அடைய நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்-முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி
x
தினத்தந்தி 22 March 2022 3:35 AM IST (Updated: 22 March 2022 3:35 AM IST)
t-max-icont-min-icon

நவீன் ஆத்மா சாந்தி அடைய நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்

பெங்களூரு: நவீன் ஆத்மா சாந்தி அடைய நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறினார். 
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

பண ஆசைக்கு கடிவாளம்

உயர்கல்வி செல்வந்தர்களுக்கு மட்டுமே என்ற நிலையை ஏற்படுத்தி மத்திய-மாநில அரசுகள் செய்த பாவங்களுக்காக மாணவர் நவீன் உயிரிழந்தார். அரசியல்வாதிகள் மற்றும் செல்வந்தர்களுக்கு உயர்கல்வி பணம் வசூலிக்கும் உண்டியல் ஆகும். இதில் சந்தேகமே இல்லை. கல்வி பெயரில் நடைபெறும் பேராசைகளுக்கு நவீன் சாவு ஒரு சவால். இன்னும் எத்தனை நவீன்கள் இறக்க வேண்டும்.பண ஆசைக்கு கடிவாளம் போட்டு அனைவருக்கும் மருத்துவ கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு தோல்வி அடைந்துள்ளது. 

மருத்துவ கல்வி கட்டணத்தை குறைப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சொல்கிறார். ஆனால் நீட் தேர்வுக்கு எதிராக அவர் வாய் திறக்காதது ஏன்?. தனியார் மருத்துவ கல்லூரிகளில் கட்டணம் அதிகமாக உள்ளதாக முதல்-மந்திரியே ஒப்பு கொண்டுள்ளார்.

சட்டசபையில் தீர்மானம்

ஆனால் அத்தகைய கல்லூரிகளுக்கு ஆதரவு வழங்குவது ஏன்?. லட்சக்கணக்கில் பணத்தை செலுத்தி பயிற்சி மையங்களில் பயிற்சி பெற ஏழை-நடுத்தர வர்க்க மாணவர்களால் முடியாது. நவீன் மரணம் மூலம் மருத்துவ கல்வி பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

நீட் தேர்வு மூலம் மருத்துவ இடம் கிடைக்காததால் உக்ரைனுக்கு சென்று மருத்துவம் படிக்கும்போது உயிரை விட்ட நவீனின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுமென்றால் இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.

Next Story