ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தர்ணா

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தர்ணா
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 5 மணி நேரம் தர்ணா போராட்டத்தில் பங்கேற்றனர்.
தர்ணா போராட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் மீது பழிவாங்கும் நோக்கத்துடன் தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்து அவரை பணி ஓய்வில் செல்ல உடனடியாக உரிய ஆணைகளை வழங்க வேண்டும்.
வரையறுக்கப்பட்ட அடிப்படை ஊதியம் பெற்று வரும் கிராம ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் வழங்குதல் மற்றும் மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கும் வழங்கி உரிய அரசாணை வெளியிட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்ட கணினி உதவியாளர்கள் அனைவருக்கும் ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையின்படி இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் நிர்ணயம் செய்து பணி வரன்முறை செய்ய வேண்டும்.
10 அம்ச கோரிக்கைகள்
முழு சுகாதார திட்ட வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு மேம்படுத்த ஊதியம் வழங்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிலையில் இருந்து உதவி இயக்குனர் நிலையிலான பதவி உயர்வு ஆணைகளை மேலும் காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
மாநில மகளிர் துணைக்குழு துணை அமைப்பாளர் வித்யா வரவேற்றார். மாநில செயலாளர் ராஜசேகர் தொடக்கி வைத்து பேசினார். கோரிக்கைகள் குறித்து மாவட்ட செயலாளர் செந்தில்குமார் பேசினார். தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சண்முகம், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில துணை தலைவர் மணியன் நிறைவுரையாற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் சரவணன் நன்றி கூறினார். காலை 11 மணிக்கு தொடங்கிய தர்ணா போராட்டம் மாலை 4 மணி வரை நடைபெற்றது.
பணிகள் பாதிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு உட்பட்ட ஊராட்சி செயலாளர்கள் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர். 400-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றதால் மாவட்டம் முழுவதும் ஊராட்சி அலுவலக பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story