பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்

ெபட்ரோல், கியாஸ் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
வடமதுரை:
தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம்
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே நடந்த கட்சி நிர்வாகி இல்ல காதணி விழாவில், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை தொடர்ந்து உயர்த்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது. பொதுமக்களின் நலன் கருதி விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் திரும்ப பெற வேண்டும்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தான் கூறினார். இதற்காக, தர்மயுத்தம் நடத்தினார்.
ஆனால் தற்போது அவரை அழைத்து விசாரிக்கும்போது, ஜெயலலிதா இறப்பில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறுகிறார். விசாரணை ஆணையம் அமைக்க சொன்னதும் அவர் தான், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதும் அவர் தான்.
மேலும் இது தொடர்பான கேள்வியை, என்னிடம் கேட்பதை விட நீங்கள் ஓ.பி.எஸ். அண்ணனிடம் கேட்டால் மிகத்தெளிவாக இதற்கு பதில் சொல்வார்.
பெயர் மாற்றம்
தாலிக்கு தங்கம், திருமண உதவி போன்ற பெண்களுக்கான திட்டங்களின் பெயரை மாற்றி கொண்டாலும் அதனை நிறைவேற்ற வேண்டும். அம்மா உணவகத்தை, கலைஞர் உணவகம் என்று பெயரை மாற்றியது போல திட்டத்தின் பெயரை வேண்டுமானால் மாற்றி கொள்ளுங்கள்.
ஆனால் மக்களுக்கு சேர வேண்டிய திட்டங்களை அரசு கொண்டு போய் சேர்க்க வேண்டும். ஏனெனில், ஒட்டுமொத்த பெண்களும் இந்த திட்டங்களை எதிர்பார்க்கின்றனர். தி.மு.க. அரசு வாக்குறுதி கொடுத்தது போல ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்.
அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் தி.மு.க. கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று ஒட்டுமொத்த பெண்கள் சார்பில் நான் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் தே.மு.தி.க. கட்சி கொடியை பிரமேலதா விஜயகாந்த் ஏற்றி வைத்தார்.
Related Tags :
Next Story