பதிவேடுகளை முறையாக பராமரிக்காத வேளாண்மை அலுவலக இளநிலை உதவியாளர் பணியிடை நீக்கம்


பதிவேடுகளை முறையாக பராமரிக்காத வேளாண்மை அலுவலக இளநிலை உதவியாளர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 24 March 2022 12:08 AM IST (Updated: 24 March 2022 12:08 AM IST)
t-max-icont-min-icon

பதிவேடுகளை முறையாக பராமரிக்காத நாட்டறம்பள்ளி வேளாண்மை அலுவலக உதவியாளரை பணியிடை நீக்கம் செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

ஜோலார்பேட்டை

பதிவேடுகளை முறையாக பராமரிக்காத நாட்டறம்பள்ளி வேளாண்மை அலுவலக உதவியாளரை பணியிடை நீக்கம் செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

பணியிடை நீக்கம்

நாட்டறம்பள்ளி பகுதியில் இயங்கி வரும் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் தன்பதிவேடு, பகிர்மான பதிவேடு ஆகியவற்றை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஸ்வாஹா நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது இந்த அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வரும் சுகந்தி, அலுவலக பதிவேடுகளை சரிவர பராமரிக்காதது கண்டறியப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்ய வேளாண்மை இணை இயக்குனருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி இளநிலை உதவியாளர் சுகந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அனைத்து அலுவலக பணியாளர்களையும் தங்களின் பதிவேடுகளை சரியாக பராமரிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

ஒரு வாரத்திற்குள்...

அதனைத் தொடர்ந்து நாட்டறம்பள்ளி வட்டார கல்வி அலுவலகம் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் வருகைப்பதிவேடு, தன்பதிவேடு, பகிர்மான பதிவேடு ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிலுவையில் உள்ள பதிவுகளை ஒரு வார காலத்திற்குள் மேற்கொள்ள வேண்டும் எனவும், அனைத்து அலுவலக பணியாளர்களும் தங்களின் பதிவேடுகளை சரியாகப் பராமரிக்க வேண்டும் எனவும் கலெக்டர் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குனர் ராஜசேகர், நாட்டறம்பள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார், வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ்குமார், தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரசாத், வேளாண்மை அலுவலர் அனுப்பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story