கர்நாடகத்தில், அறநிலைய சட்டப்படி ஆன்மிக தலங்களில் இந்து அல்லாத வியாபாரிகளுக்கு கட்டிடங்களை குத்தகைக்கு வழங்க முடியாது-மந்திரி மாதுசாமி

கர்நாடக அறநிலைய சட்டப்படி இந்து அல்லாத பிற மத வியாபாரிகளுக்கு ஆன்மிக தலங்களில் கட்டிடங்களை குத்தகைக்கு வழங்க முடியாது என்று சட்டசபையில் சட்டசபை விவகாரத்துறை மந்திரி மாதுசாமி கூறியுள்ளார்
பெங்களூரு: கர்நாடக அறநிலைய சட்டப்படி இந்து அல்லாத பிற மத வியாபாரிகளுக்கு ஆன்மிக தலங்களில் கட்டிடங்களை குத்தகைக்கு வழங்க முடியாது என்று சட்டசபையில் சட்டசபை விவகாரத்துறை மந்திரி மாதுசாமி கூறியுள்ளார்.
அனுமதி இல்லை
கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் 2022-23-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தாக்கல் செய்தார். இந்த நிலையில் பல்வேறு துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் 14-வது நாள் கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து பூஜ்ஜிய நேரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் யு.டிகாதர், ‘சமுதாயத்தில் நல்லிணக்கம், சகோதரத்துவத்தை ஏற்படுத்த வேண்டுமே தவிர அதற்கு பங்கத்தை ஏற்படுத்தும் வேலையை யாரும் செய்யக்கூடாது. தெருவோர வியாபாரிகள் சுயமரியாதையுடன் வாழ்க்கையை நடத்துகிறார்கள். அத்தகையவர்களுக்கு மத திருவிழாக்களில் கடைகளை திறக்க அனுமதி இல்லை என்று சிலர் தடை விதித்துள்ளனர்’ என்றார்.
கூச்சல்-குழப்பம்
அப்போது யு.டி.காதர் பயன்படுத்திய வார்த்தைக்கு பா.ஜனதா உறுப்பினர் கே.ஜி.போப்பையா கடும் ஆட்சேபனையை தெரிவித்தார். அதற்கு பா.ஜனதாவின் பிற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து குரல் எழுப்பினர். அதேபோல் காங்கிரஸ் உறுப்பினர்களும் எழுந்து நின்று யு.டி.காதருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது.
இதனால் சபையில் ஏற்பட்ட அமளி சிறிது நேரம் நீடித்தது. காங்கிரஸ் உறுப்பினர்கள் இருக்கையில் அமர்ந்த பிறகும் பா.ஜனதா உறுப்பினர்கள் தொடர்ந்து ஆவேசமாக பேசினர். அவர்களை இருக்கையில் அமரும்படி சபாநாயகர் காகேரி தொடர்ந்து கேட்டுக்கொண்டார். ஆனால் அவர்கள் சபாநாயகரின் வேண்டுகோளை ஏற்கவில்லை.
அதைத்தொடர்ந்து சட்டசபை விவகாரத்துறை மந்திரி மாதுசாமி, அந்த உறுப்பினர்களிடமே சென்று இருக்கையில் அமரும்படி கேட்டு கொண்டார். அதன் பிறகே அவர்கள் அமைதி நிலைக்கு திரும்பினர்.
குத்தகைக்கு வழங்க முடியாது
அதைத்தொடர்ந்து யு.டி.காதர் மீண்டும் பேசும்போது, ‘சமுதாயத்தில் சகோதரத்துவம் அவசியம். எந்த மதமாக இருந்தாலும், மத ஆன்மிக தலங்களில் எந்த மதத்தை சேர்ந்தவரும் வியாபாரம் செய்ய அவகாசம் உள்ளது. முஸ்லிம் வியாபாரிகளுக்கு அனுமதி இல்லை என்று கூறி பேனர் வைக்கிறார்கள். அத்தகையர்கள் நல்லிணக்கத்தை கெடுக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்தகையவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் ரிஸ்வான் ஹர்ஷத் பேசினார்.
இந்த விவாதத்திற்கு சட்டசபை விவகாரத்துறை மந்திரி மாதுசாமி பதிலளிக்கையில் கூறியதாவது:-
2002-ம் ஆண்டு இந்து அறநிலைய சட்டப்படி, இந்து மத ஆன்மிக தலங்கள் மற்றும் அதன் அருகில் உள்ள கட்டிடங்களை இந்து அல்லாதோருக்கு குத்தகைக்கு வழங்க முடியாது. இந்த சட்டம் காங்கிரஸ் ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டுள்ளது. சட்டத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதை தான் நான் இங்கே குறிப்பிடுகிறேன். அதே நேரத்தில் பொது இடங்களில் இவ்வாறு பிற மத வியாபாரிகளுக்கு அனுமதி இல்லை என்று பலகை வைத்தால் அதன் மீது அரசு நடவடிக்கை எடுக்கும். மத நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவதை அரசு அனுமதிக்காது’ என்றார்.
Related Tags :
Next Story