கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்ட தாராவி


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 25 March 2022 6:48 PM IST (Updated: 25 March 2022 6:48 PM IST)
t-max-icont-min-icon

பாதிக்கப்பட்ட அனைவரும் குணமாகி, புதிதாக யாருக்கும் தொற்று கண்டறியப்படாததால் தாராவி கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு உள்ளது.

மும்பை, 
பாதிக்கப்பட்ட அனைவரும் குணமாகி, புதிதாக யாருக்கும் தொற்று கண்டறியப்படாததால் தாராவி கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு உள்ளது.
'ஹாட்ஸ்பாட்' தாராவி
மராட்டியத்தில் 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் நுழைந்தது. மாநில தலைநகர் மும்பையில் மார்ச் 11-ந் தேதி முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார். இந்தநிலையில் முதல் முதலாக ஏப்ரல் 1-ந் தேதி உலகின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அன்றே வைரஸ் நோய்க்கு முதல் பலியும் பதிவானது.
மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள தாராவியில் நோய் தொற்று நுழைந்தது நாடு முழுவதும் கலக்கத்தை ஏற்படுத்தியது. அங்கு எப்படி தான் நோய் பரவலை கட்டுப்படுத்த போகிறார்களோ என்ற அச்சம் உருவானது. இதற்கு ஏற்ப ஆரம்ப நாட்களில் தாராவியில் கொரோனா தொற்று வேகமாக பரவியது. ஏப்ரல் மாத இறுதியில் அங்கு 340 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தாராவி கொரோனா 'ஹாட்ஸ்பாட்' ஆக கருதப்பட்டது. மே மாதமும் நோய் பரவல் அதிகமாகவே இருந்தது. மே 3-ந் தேதி அதிகபட்சமாக 94 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
உலக சுகாதார அமைப்பு பாராட்டு
எனினும் தாராவியில் நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிரமாக ஈடுபட்டது. இதேபோல பல அரசியல் கட்சி, தன்னார்வ அமைப்புகளும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தாராவி மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டினர். இதேபோல கொளுத்தும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான சுகாதாரப்பணியாளர்கள் பி.பி.டி. கிட் உடை அணிந்தபடி தாராவியில் உள்ள குறுகலான சால் பகுதிகளிலும் வீடு, வீடாக நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டதை யாரும் மறந்துவிட முடியாது. 
இதற்கு பலன் மே மாத இறுதியிலேயே தெரிந்தது. தாராவியில் ஜூன் மாதம் முதல் நோய் பரவல் குறைந்தது. தாராவியில் நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டதை உலக சுகாதார அமைப்பே பாராட்டி இருந்தது. அதன்பிறகு 2-வது அலையின் போது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நோய் பரவல் அதிகரித்தது. இதில் ஒரு நாளில் 99 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். எனினும் மே மாதம் முதல் மீண்டும் அங்கு நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.
முழுமையாக மீண்டது
இந்தநிலையில் தற்போது தாராவி கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு உள்ளது. நேற்று முன்தினம் தாராவியில் புதிதாக யாருக்கும் நோய் தொற்று கண்டறியப்படவில்லை. இதேபோல ஏற்கனவே தொற்று பாதித்த அனைவரும் குணமடைந்துவிட்டனர். எனவே தாராவி கொரோனா இல்லாத பகுதியாக மாறி உள்ளது. 
இங்கு மொத்தம் 8 ஆயிரத்து 652 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 419 பேர் உயிரிழந்து உள்ளனர். 
கொரோனா ஹாட்ஸ் பாட்டாக திகழ்ந்த தாராவி அதில் இருந்து முழுமையாக மீண்டு வந்து இருப்பது பொதுமக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story