கூடலூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்


கூடலூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 25 March 2022 10:10 PM IST (Updated: 25 March 2022 10:10 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் வீடுகளை உடைத்து சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன.

கூடலூர்

கூடலூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் வீடுகளை உடைத்து சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. 

காட்டு யானைகள் 

கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் வர தொடங்கி உள்ளது. இந்த நிலையில் வனப்பகுதியை விட்டு வெளியே வந்த 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட சின்ன சூண்டி குரும்பர்பாடியில் உள்ள ஆதிவாசி மக்கள் குடியிருப்புக்குள் புகுந்தன. 

பின்னர் அங்கிருந்து வீடுகளை முற்றுகையிட்டபடி காட்டு யானைகள் சூழ்ந்து நின்றன. இதனால் பொதுமக்கள்  அச்சத்துடன் வீடுகளுக்குள் முடங்கி இருந்தனர்.  இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பொம்மன் என்பவர் வீட்டின் முன்பக்க சுவரை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தின. 
வீடுகளை உடைத்தது

பொம்மன் தனது மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றதால் வீட்டில் யாரும் இல்லை. இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படவில்லை.

 பின்னர் அங்கிருந்து சென்ற காட்டு யானைகள், அதே பகுதியை சேர்ந்த மேராஜி, கேத்தி, கேத்தன் ஆகியோரின் வீடுகளையும் உடைத்து சேதப்படுத்தின. இதில் வீடுகளுக்குள் இருந்த பொருட்களும் உடைந்தன.

 அதிகாலை வரை அங்கேயே முகாமிட்டு இருந்த காட்டு யானைகள் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றன. 

வனத்துறையினர் ஆய்வு

இது குறித்து தகவல் அறிந்த கூடலூர் உதவி வனப்பாதுகாவலர் சீனிவாசன், பேரூராட்சி தலைவர் சித்ராதேவி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். 

அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை சரிசெய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

இது குறித்து ஆதிவாசி மக்கள் கூறும்போது, தற்போது கோடைகாலம் என்பதால் காட்டு யானைகளின் தொந்தரவு அதிகமாக இருக்கிறது. அடிக்கடி குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. 

எனவே வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றனர்.


Next Story