குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த மீனவர்கள் திடீர் போராட்டம்


குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த மீனவர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 25 March 2022 11:12 PM IST (Updated: 25 March 2022 11:12 PM IST)
t-max-icont-min-icon

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த மீனவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில், 
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த மீனவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மீனவர் குறைதீர்க்கும் கூட்டம்
குமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, உதவி கலெக்டர் அலர்மேல்மங்கை, மீன்வளத்துறை துணை இயக்குனர் காசிநாத பாண்டியன், உதவி இயக்குனர் மோகன்ராஜ் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த அந்தோணி, நெய்தல் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் குறும்பனை பெர்லின், இணைச்செயலாளர் விமல்ராஜ், அலெக்சாண்டர், இனயம்புத்தன்துறை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் யூஜின், தூத்தூர் பஞ்சாயத்து தலைவர் லைலா, கேசவன்புத்தன்துறை பஞ்சாயத்து தலைவர் கெபின்ஷா, பள்ளம் பஞ்சாயத்து தலைவர் அந்தோணி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
பரபரப்பு
கூட்டம் தொடங்கியதும் மீனவர்கள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர். அவர்களிடம் இருந்து கலெக்டர் அரவிந்த் மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது உள்நாட்டு மீனவர்கள் தரப்பில் அந்தோணி, சகாயம் தலைமையில் ஏராளமானோர் மனு கொடுத்தனர். 
அதில் குமரி மாவட்டத்தில் உள்ள குளங்களில் மீன் பிடிப்பதற்கு பொது ஏலம் விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஏலத்தை ரத்து செய்து விட்டு, உள்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் அரவிந்த் உறுதி அளித்தார்.
பின்னர் நடந்த கூட்டத்தில் மீனவர்கள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் வைத்த கோரிக்கைகள் வருமாறு:-
ஓய்வூதியம்
நாகர்கோவிலில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை மாற்றக்கூடாது. உள்நாட்டு மீனவர்களுக்கென முன்பு தனியாக உதவி இயக்குனர் அலுவலகம் செயல்பட்டதை போன்று மீண்டும் கொண்டு வர வேண்டும். தேங்காப்பட்டணத்தில் உதவி இயக்குனர் அலுவலகத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும். அரசு கட்டிடம் இல்லாத பட்சத்தில் வாடகை கட்டிடத்திலாவது செயல்படுத்த வேண்டும். மேலும் குமரி மாவட்டத்துக்கு துணை இயக்குனருக்கு பதிலாக அதிகாரம் உள்ள, உடனடி முடிவு எடுக்கக்கூடிய இணை இயக்குனர் பதவியை ஏற்படுத்த வேண்டும்.
சின்னமுட்டம் துறைமுகம் அமைக்கப்பட்டு 35 ஆண்டுகள் ஆகும் நிலையில் துறைமுகத்தை தூர்வார தற்போது நடவடிக்கை எடுத்த அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். கன்னியாகுமரியில் உள்ள பல்வேறு விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் கடலில் விடப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு, கடல் மாசு ஏற்படுவதோடு, சுகாதாரக்கேடும் ஏற்படும் நிலை உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
அந்த கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து தீர்வு காணப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
போராட்டம்
முன்னதாக மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்த அரங்கில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பியதால், மனு கொடுக்க வந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் அந்த அரங்கு முன் திரண்டு நின்றிருந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அரங்குக்குள் செல்ல அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும், மீனவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து மீனவர்கள் கூட்டம் நடைபெற்ற அரங்கின் வெளியே அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு உருவாகியது. இதையடுத்து துணை சூப்பிரண்டு நவீன்குமார் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ஒவ்வொருவராக அரங்குக்குள் சென்று கலெக்டரிடம் மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டனர். இதன் பிறகு பரபரப்பு அடங்கியது.

Next Story