நாமக்கல் மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்


நாமக்கல் மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

நாமக்கல் மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.

எலச்சிப்பாளையம்:
பயிர்கள் அழிப்பு
தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி, அதனை மீட்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் நாமக்கல் மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து கணக்கெடுத்து, அதனை மீட்க கலெக்டர் ஸ்ரேயாசிங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து வருவாய்த்துறை, பொதுப்பணித்துறையினர் இணைந்து நீர்நிலைகளை மீட்டு வருகின்றனர்.
திருச்செங்கோடு அருகே உள்ள கூத்தாநத்தம், மேல்முகம் பகுதியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து சிலர் வாழை, கரும்பு, தீவனப்புல் போன்றவற்றை பயிரிட்டு இருந்தனர். இதையடுத்து திருச்செங்கோடு மண்டல துணை தாசில்தார் சக்திவேல், மல்லசமுத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமி மற்றும் அலுவலர்கள் கூத்தாநத்தம், மேல்முகம் பகுதியில் 3 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு, தீவனப்புல் ஆகியவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் அழித்தனர். பின்னர் 3 ஏக்கர் நிலமும் மீட்கப்பட்டன.
குமாரபாளையம்
குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக அங்கீகாரம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அவ்வாறு விற்பனை செய்யப்படும் விவசாய நிலங்களையொட்டி உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. 
இந்தநிலையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து கடந்த 20 நாட்களாக வருவாய்த்துறையினர் கணக்கிட்டு வந்தனர். இதையடுத்து நேற்று முதல்கட்டமாக குமாரபாளையம் அருகே குப்பண்டபாளையம் ஊராட்சி கோட்டைமேடு பகுதியில் வாய்க்காலை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த வழித்தடத்தை தாசில்தார் தமிழரசி தலைமையிலான அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.
மோகனூர், எருமப்பட்டி
மோகனூர் அருகே உள்ள எஸ்.வாழவந்தி கிராமத்தில் ஏரி புறம்போக்கை சிலர் ஆக்கிரமித்து குடிசைகள் அமைத்திருந்தனர். மோகனூர் தாசில்தார் தங்கராஜ் தலைமையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது மண்டல துணை தாசில்தார் கணபதி, பாலப்பட்டி வருவாய் ஆய்வாளர் புவனேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் கலா ஆகியோர் உடன் இருந்தனர்.
இதேபோல் எருமப்பட்டி அருகே உள்ள ரெட்டிப்பட்டி சாலபாளையத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 50 சென்ட் நிலத்தை சேந்தமங்கலம் தாசில்தார் சுரேஷ் தலைமையிலான அதிகாரிகள் மீட்டனர். அப்போது சேந்தமங்கலம் மண்டால துணை தாசில்தார் பாரதிராஜா, வட்ட சார் ஆய்வாளர் கனகராஜ், வருவாய் ஆய்வாளர் செல்வமணி ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story