ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றபோது 2 பேர் மயங்கி விழுந்தனர்


ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றபோது 2 பேர் மயங்கி விழுந்தனர்
x
தினத்தந்தி 26 March 2022 1:31 AM IST (Updated: 26 March 2022 1:31 AM IST)
t-max-icont-min-icon

விராலிமலை அருகே ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றபோது 2 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விராலிமலை
விராலிமலை தாலுகா, செரளப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60). இவர், தனது வீட்டிற்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக விராலிமலை தாலுகா அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்தை பார்வையிட்ட அதிகாரிகள் பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களிடம் அதனை அகற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.
பலமுறை அறிவுறுத்தியும் சம்பந்தப்பட்டவர்கள் பாதை ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ளாததால் நேற்று அந்த ஆக்கிரமிப்பை அகற்ற விராலிமலை தாசில்தார் சரவணன், தலைமை நிலஅளவர் சாகுல்ஹமீது மற்றும் போலீசார் பொக்லைன் எந்திரத்துடன் சென்று ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனர்.
2 பேர் மயங்கி விழுந்தனர்
 அப்போது ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்பட்ட கோபால் என்பவர் தனது மனைவி பாக்கியத்துடன் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு திடீரென இருவரும் மயங்கி கீழே விழுந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். இதில், பாக்கியத்திற்கு மயக்கம் தெளிந்து விடவே, கோபால் மயங்கிய நிலையிலேயே இருந்ததால் அவரை சிகிச்சைக்காக கொடும்பாளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதனைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்ற முயன்ற அதிகாரிகளிடம் ஆக்கிரமிப்பு செய்த நபர்களின் குடும்பத்தினர் இன்னும் 10 நாட்கள் அவகாசம்  கேட்டுக் கொண்டதன்பேரில், அதிகாரிகள் அவகாசம் வழங்கி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் முயன்றபோது 2 பேர் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story