உறுப்பினர்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை

உறுப்பினர்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கீழ்வேளூர் ஒன்றியக்குழு தலைவர் கூறினார்.
சிக்கல்:
உறுப்பினர்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கீழ்வேளூர் ஒன்றியக்குழு தலைவர் கூறினார்.
ஒன்றியக்குழு கூட்டம்
கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் வாசுகி நாகராஜன் தலைமை தாங்கினார். துணை தலைவர் புருஷோத்தமதாஸ், ஒன்றிய ஆணையர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உறுப்பினர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:-
கண்ணன் (தி.மு.க.):- தேவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்ப்பள்ளியில் சத்துணவு திட்டத்தில் சமையல் உதவியாளர்கள் இரண்டு பேர் இருந்து வந்தனர். தற்போது ஒரு உதவியாளர் மட்டுமே உள்ளதால் உரிய நேரத்தில் மாணவர்களுக்கு உணவு வழங்க முடியாத நிலை உள்ளது. மேலும் ஒரு உதவியாளர் பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீர்த்தேக்க தொட்டி
வாசுகி (தி.மு.க.):-கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.75 லட்சம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய பங்கு தொகையாக செலுத்திட மாவட்ட ஊராட்சி முகமை அனுமதி கோரப்பட்டு உள்ளது.நாங்கள் ஒன்றிய கவுன்சிலராக பதவியேற்று 2½ ஆண்டுகளான நிலையில், கவுன்சிலர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகள் குறைவாக ஒதுக்கீடு செய்து உள்ளனர். ரூ.75 லட்சம் கேட்கும் தொகையை ஒன்றிய கவுன்சிலர்கள் 12 பேருக்கும் மக்களுக்கு பணிகள் செய்வதற்கு பிரித்து கொடுக்க வேண்டும்.
தேன்மொழி (அ.தி.மு.க.):- தமிழக ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.75 லட்சம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய பங்கு தொகை ஒதுக்கீடு செய்ய அனுமதிக்க கூடாது. ஒன்றிய கவுன்சிலர்களுக்கு உரிய வேலைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதி போதுமானதாக இல்லை.கோவில் கடம்பனூரில் 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட குடிநீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். அகரகடம்பனூர் ஊராட்சி ஆலக்கரை செல்லும் மண் சாலையை தார்சாலையாக மாற்ற வேண்டும்.
கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை
பிரவிணா (அ.தி.மு.க.):- கொடியலத்தூர் ஊராட்சியில் வலிவலம் போலீஸ் நிலையம் முதல் கோவில்பத்து வரை உள்ள சாலை மோசமான நிலையில் உள்ளது. அதை சீரமைக்க வேண்டும்.
புருஷோத்தமதாஸ் (துணை தலைவர்):- ஆந்தகுடி வடக்கு தெரு, மற்றும் மணலூர் ஊராட்சியில் பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். காக்கழனி அங்கன்வாடி தெரு மண் சாலையை தார்ச் சாலையாக மாற்றி அமைக்க வேண்டும்
வாசுகி நாகராஜன்(தலைவர்):- உறுப்பினர்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது. இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரெங்கா, கருணாநிதி இல்முன்னிசா, ரேவதி, ஹபிப்கனி மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், அரசுத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story