லாரியில் 11 டன் ரேஷன் அரிசி கடத்தல்

சிதம்பரத்தில் இருந்து ஆந்திராவுக்கு லாரியில் 11 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர்,
கடலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று சிதம்பரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது லால்புரம் பகுதியில் சென்ற போது 2 பேர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அங்கு சந்தோஷ் என்பவரது வீட்டின் முன்பு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த லாரியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது லாரியில் இருந்த சாக்கு மூட்டைகளை சோதனை செய்தனர். இதில் 220 மூட்டைகளில் மொத்தம் 11 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாரியில் இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
2 பேருக்கு வலைவீச்சு
விசாரணையில் அவர்கள் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள செர்லபாளையத்தை சேர்ந்த சரவணன் மகன் ராம்கி (வயது 32), சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி பாலூத்தங்கரையை சேர்ந்த ராமசாமி மகன் ராஜேந்திரன் (59) என்பதும், தப்பி ஓடியவர்கள் கணேசன், சந்தோஷ் என்பதும், இவர்கள் சிதம்பரம் பகுதியில் இருந்து ஆந்திராவிற்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்கி, ராஜேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து லாரியுடன் 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே தப்பி ஓடிய கணேசன், சந்தோஷ் ஆகியோரை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் தப்பி ஓடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story