சொந்தமாக வீடு இல்லையெனில் இணையதளத்தில் மனு செய்து பயனடையலாம்
பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் சொந்தமாக வீடு இல்லையெனில் இணையதளத்தில் மனு செய்து பயனடையலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்,
தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையின் கீழ் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற சொந்தமாக வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால் அவர்களாகவே வீடு கட்டிக்கொள்ள நிதியுதவி வழங்குவது அல்லது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதியுதவி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வீடு வழங்கும் திட்டத்தில் பயன்பெறுவோர் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் தொழிலாளியாக பதிவு பெற்று தொடர்ந்து 3 ஆண்டுகாலம் உறுப்பினராக இருத்தல் வேண்டும். பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளியின் குடும்பத்தினருக்கு சொந்தமாக கான்கிரீட் வீடு இருத்தல் கூடாது, மத்திய, மாநில அரசுகளின் வேறு எந்த வீட்டு வசதி திட்டங்களிலும் பயன்பெற்றிருத்தல் கூடாது. அவரது ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். அவர் குறைந்தபட்சம் 300 சதுரஅடி சொந்த இடம் கொண்டிருக்க வேண்டும்.
இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
மேலும் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளியின் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலோ இணைந்து வீட்டுமனைப்பட்டா இருத்தல் வேண்டும். அதற்கான தொகை 2 தவணைகளாக வழங்கப்படும். முதல் தவணை ரூ.2 லட்சத்து 76 ஆயிரமும், 2-ம் தவணை ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும், அத்தொகை ரூ.4 லட்சமாக வரையறை செய்யப்பட்டுள்ளது. மேற்கண்டவாறு வீட்டுமனை இல்லாத பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை தேர்ந்தெடுத்து குடியிருப்பு ஒதுக்கீடு பெறவும் இத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தின் இணையதள முகவரியான http://tnuwwb.tn.gov.in என்ற முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் சொந்தமாக வீடு இல்லையெனில் மேற்கண்ட விதிகளுக்கு உட்பட்டு உரிய முறையில் இணையதளத்தில் மனு செய்து பயனடையலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story