டாக்டர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 300 தனியார் மருத்துவமனைகள் மூடல் நோயாளிகள் அவதி

தேனி மாவட்டத்தில் 300 தனியார் மருத்துவமனைகளை மூடி, டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.
தேனி:
வேலை நிறுத்தம்
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் டாக்டர் அர்ச்சனா சர்மா. இவர் மீது தவறான சிகிச்சை அளித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால், அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், டாக்டர் அர்ச்சனா சர்மா மீது தவறாக வழக்குப்பதிவு செய்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், டாக்டர் அர்ச்சனா சர்மாவின் குடும்பத்துக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும், டாக்டர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும், டாக்டர்களை குற்றவாளிகளாக பதிவு செய்யும் இந்திய தண்டனை சட்ட பிரிவுகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது.
அதன்படி தேனி மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மற்றும் வழக்கமான பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
300 மருத்துவமனைகள்
இந்த போராட்டம் எதிரொலியாக மாவட்டத்தில் சுமார் 300 தனியார் மருத்துவமனைகள் இன்று மூடப்பட்டன. அங்கு பணியாற்றும் சுமார் 850 டாக்டர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலை நிறுத்தம் எதிரொலியாக மருத்துவமனைகளுக்கு காய்ச்சல், உடல் உபாதைகள் போன்ற காரணங்களுக்காக சிகிச்சை பெற வந்த மக்கள் ஏமாற்றத்துடனும், அவதியுடனும் திரும்பி சென்றனர். அதே நேரத்தில் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு வழக்கம்போல் செயல்பட்டது.
கம்பம்
இதுபோல கம்பம் அரசு மருத்துவமனை முன்பு இந்திய மருத்துவக்கழகத்தின் முல்லைப்பெரியாறு கிளை தலைவர் டாக்டர் அழகர்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செயலாளர் டாக்டர் மகேஷ்பாண்டியன் முன்னிலை வகித்தார். இதில் டாக்டர்கள் ஓடையன், சையது சுல்தான் இப்ராகிம், பொன்னரசன் உள்பட அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story