5 கிலோ கஞ்சா பறிமுதல்; 4 பேர் கைது

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரோந்து பணி
சிவகாசி கிழக்கு போலீசார் நாரணாபுரம் விலக்கு அருகில் உள்ள ஒரு கோவில் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்கிற தீப்பிடித்தான் (வயது 63) என்பவர் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தார்.
அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இதே போல் மாரனேரி போலீசார் முனீஸ்நகரில் உள்ள பேப்பர் அரவை குடோனில் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது அங்கு 1 கிலோ 125 கிராம் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அங்கிருந்த கருப்பசாமி (27) என்பவரை போலீசார் கைது செய்து கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக சிலரை தேடி வருகின்றனர்.
கஞ்சா பறிமுதல்
காரியாபட்டி சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி தலைமையிலான போலீசார் காரியாபட்டி பஸ் நிலையம் அருகே உள்ள சந்தப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கே.ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (49) என்பவர் மோட்டார் சைக்கிளில் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி கஞ்சாவை பறிமுதல் செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனர்.
பாதுகாப்பு பணி
அதேபோல ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் நகர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை விசாரித்தபோது அவர் 2 கிலோ கஞ்சாவை வைத்திருந்தது தெரியவந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி தெருவை சேர்ந்த சோலை ராஜ் (56) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து போலீசார், அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story