அரசு ஆஸ்பத்திரியில் நாய்கடி மருந்து இல்லாததை கண்டித்து சிதம்பரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்

அரசு ஆஸ்பத்திரியில் நாய்கடி மருந்து இல்லாததை கண்டித்து சிதம்பரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
சிதம்பரம்
மருந்து இல்லை
சிதம்பரத்தை சேர்ந்தவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மணிவாசகம். இவரை நாய் கடித்தது. இதையடுத்து நேற்று காலை அவர் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
அப்போது அங்கு பணியில் டாக்டர்கள் யாரும் இ்ல்லை. சிறிது நேரத்தில் அங்கு வந்த டாக்டர் ஒருவர், நாய்கடித்ததற்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள் தற்போது ஆஸ்பத்திரியில் இ்ல்லை என்று மணிவாசகத்திடம் கூறியுள்ளார். இதேபோல், அங்கு நாய் கடித்ததாக வந்த புவனகிரியை சேர்ந்த லதா என்கிற பெண்ணுக்கும் மருந்து இல்லை என்று கூறி சிகிச்சை அளிக்காமல் இருந்துள்ளனர். இதில் லதா கடந்த 10 நாட்களாக ஆஸ்பத்திரிக்கு சென்று வருகிறார். ஆனால் இதுநாள் வரைக்கும் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது.
சாலை மறியல்
இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மணிவாசகம், மாவட்ட நிர்வாகக்குழு வி.எம். சேகர், நகர செயலாளர் தமிமுன் அன்சாரி ஆகியோர் பொதுமக்களுடன் ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ரவி ஆகியோர் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசினர். இதை தொடர்ந்து மறியலை கைவிட்ட அவர்கள், ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதையடுத்து தலைமை மருத்துவர் ரவி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஆஸ்பத்திரியில் நாய்கடிக்கான மருந்துகள் தீர்ந்துவிட்டது. இதுகுறித்து நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளோம். எனவே விரைவில் மருந்துகள் வந்துவிடும் என்று தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story