கடையம் பகுதியில் எலுமிச்சை விளைச்சல் அமோகம்..!

கடையம் பகுதியில் எலுமிச்சை விளைச்சல் அமோகமாக உள்ளது. எலுமிச்சைக்கு நல்ல விலை உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கடையம்:
கடையம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் எலுமிச்சை சாகுபடி செய்துள்ளனர். தற்போது எலுமிச்சை விைளச்சல் அமோகமாக உள்ளது. இதனால் எலுமிச்சை பழங்கள் பறிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடையத்தில் உள்ள ஏலக்கடைகளுக்கு விவசாயிகள் மூட்டை மூட்டையாக எலுமிச்சை பழங்களை கொண்டு வருகின்றனர். அவற்றை ஏலத்தில் எடுக்கும் வியாபாரிகள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
கடையத்தில் உள்ள ஏலக்கடைகளில் நேற்று ஒரு கிலோ எலுமிச்சை பழம் முதல் ரகம் ரூ.150-க்கும், 2-ம் ரகம் ரூ.100-க்கும், 3-ம் ரகம் ரூ.70-க்கும் விற்பனையானது. சில்லறை விலையில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.5 முதல் ரூ.10 வரையிலும் ரகம்வாரியாக விற்கப்பட்டது.
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து போதிய எலுமிச்சை பழங்கள் சந்தைக்கு வராததால், கடையம் பகுதியில் இருந்து அதிகளவில் எலுமிச்சை பழங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் அவற்றின் விலை உயர்ந்துள்ளது’ என்றார்.
கடையம் பகுதியில் எலுமிச்சை பழங்கள் விற்பனை அதிகளவில் நடைபெறுவதாலும், அவற்றுக்கு நல்ல விலை கிடைப்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story