கரூரில் சாலை அமைத்ததாக கூறி ரூ.10 கோடி மோசடி-முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

கரூர் மாவட்டத்தில் சாலை அமைத்ததாக கூறி ரூ.10 கோடி மோசடி நடைபெற்றதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டினார்.
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அ.தி.மு.க.வினர், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத்திடம் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கடந்த 2021-ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு தற்போதைய அரசு அமைந்த பிறகு மாநில நெடுஞ்சாலைதுறை மூலம் கரூர் மாவட்டத்தில் விடப்பட்ட ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.172 கோடி ஆகும். அதில் ஒரு ஒப்பந்ததாரருக்கு மட்டும் ரூ.130 கோடிக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஆன்லைன் டெண்டர்கள் ஆகும்.
கரூர் மாவட்டத்தில் ஒருவருடைய அனுமதி இல்லாமல் யாரும் டெண்டர் போட முடியாது. அப்படி டெண்டர் போட்டால் அந்த ஒப்பந்ததாரர் அந்த வேலையை செய்ய முடியாது என சிலர் பகிரங்கமாக மிரட்டுகிறார்கள். அதுமட்டுமல்லாது ரூ.10 கோடி அளவிற்கு அரசு அதிகாரிகளின் துணையுடன் சாலை அமைத்ததாக கூறி பணம் பெற்றிருக்கிறார்கள். இந்த ஊழலை தீர விசாரிக்கும் வரை அந்த ஒப்பந்ததாரரை எந்த வேலையையும் செய்ய அனுமதிக்க கூடாது. இந்த மிகப்பெரிய ஊழலை தீர விசாரித்து தவறு செய்த ஒப்பந்ததாரர் மற்றும் அரசு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:- கரூர் மாவட்டத்தில் ஒப்பந்ததாரர் ஒருவரின் நிறுவனம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்காமல் பணம் பெற்றதாக தகவல் வந்தது. அதுசம்பந்தமாக அந்த சாலைகளை பார்வையிட்டு, அதுதொடர்பான மனுவை கொடுத்துள்ளோம். சாலைகள் அனைத்தும் நல்ல நிலையில் இருக்கும்போது அதை எந்த அதிகாரி புதிதாக போடுவதற்கு பரிந்துரை செய்தார் என்று தெரியவில்லை. இது சம்பந்தமான அனைத்து விவரங்களையும் மனுவாக கொடுத்துள்ளோம். அதுசம்பந்தமாக விசாரித்து முடிவு தெரியும் வரை அந்த சாலைகளில் புதிதாக வேலைகள் தொடங்க கூடாது என்றும் கூறியிருக்கிறோம். இதுசம்பந்தமாக ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளோம். அ.தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு எந்தவொரு நிதியும் கொடுப்பதில்லை. நாங்கள் கொடுத்துள்ள புகாரை மாவட்ட கலெக்டர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருப்போம். தலைமையிடம் அனுமதிபெற்று உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யலாம் என நினைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story