முதல்-அமைச்சரை அவதூறாக பேசியதாக எச்.ராஜா மீது போலீசில் புகார்

முதல்-அமைச்சரை அவதூறாக பேசியதாக எச்.ராஜா மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
கீரமங்கலம், ஏப்.7-
கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தை சேர்ந்த முகமது அலி என்பவர் தனது மனைவி பெயரில் அறக்கட்டளை கட்டிடம் கட்டி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் வீடு கட்ட அனுமதி பெற்று வழிபாட்டு தலம் போல கட்டப்பட்டு வருகிறது. அதனால் அந்த வழிபாட்டு தலத்தை அகற்ற வேண்டும் என்று கூறி பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தலைமையில் பா.ஜ.க.வினர் ஊர்வலமாக சென்ற போது கீரமங்கலம் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். வழிபாட்டு தலம் வருகிற 13-ந் தேதிக்குள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் முன்னிலையில் ஊராட்சிமன்ற தலைவர் மஞ்சுளா எழுதிக் கொடுத்த பிறகு கலைந்து சென்றனர். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் தனது கட்சி நிர்வாகிகளுடன் வந்து கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் மேற்பனைக்காடு கிராமத்திற்கு வந்திருந்த எச்.ராஜா ஒற்றுமையாக இருக்கும் கிராமத்தில் பிளவு ஏற்படுத்துவது போலவும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் வெளிநாடு பயணத்தின் போது அங்கு நடனக்கலைஞர் ஜாகிர் உசேனை சந்தித்தது குறித்தும், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்றும், அரசு அதிகாரிகள் ஒரு மதத்திற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அவதூறாக பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுகிறது. எனவே அவதூறாக பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கீரமங்கலம் போலீசார் புகார் மனுவை பெற்றுக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story