தரைப்பாலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிய லாரி


தரைப்பாலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிய லாரி
x
தினத்தந்தி 8 April 2022 9:16 PM IST (Updated: 8 April 2022 9:16 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் தரைப்பாலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் லாரி சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

குள்ளனம்பட்டி:
திண்டுக்கல்லில் தரைப்பாலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் லாரி சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தரைப்பாலத்தில் திடீர் பள்ளம்
திண்டுக்கல்-நத்தம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் திண்டுக்கல்லில் இருந்து சிறுமலை பிரிவு வரையிலான சாலையில் இருபுறமும் பெரிய மற்றும் சிறிய பாலங்கள் அமைக்கும் பணி நடக்கிறது. அதன்படி திண்டுக்கல் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையம் அருகில், மாணவர் விடுதியின் எதிரே உள்ள ஏ.பி.நகரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தரைப்பாலம் அமைக்கப்பட்டது. 
இந்தநிலையில் நேற்று காலை கட்டிட கழிவுகளை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று ஏ.பி.நகரில் வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை செம்பட்டியை சேர்ந்த நாகராஜன் என்பவர் ஓட்டி வந்தார். ஏ.பி.நகர் தரைப்பாலத்தில் அந்த லாரி வந்தபோது, திடீரென்று அதில் பள்ளம் ஏற்பட்டது. அத்துடன் லாரியின் பின்பக்க சக்கரம் அந்த பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. இதனால் அந்த லாரியை நகர்த்தமுடியாமல் டிரைவர் திணறினார்.
இதையடுத்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, அதன்மூலம் பள்ளத்தில் சிக்கிய லாரி மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தால் ஏ.பி.நகரில் பரபரப்பு ஏற்பட்டது.
தரமற்ற முறையில்...
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், தரமற்ற முறையில் தரைப்பாலம் அமைத்ததால், திடீர் பள்ளம் ஏற்பட்டு விபத்து நடந்துள்ளது. இந்த தரைப்பாலம் வழியாக தான் பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு வேன்கள் செல்கிறது. மேலும் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட தரைப்பாலத்தை ஆய்வு செய்து, தரமான முறையில் தரைப்பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story