18 வயது நிரம்பியவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்; மந்திரி சுதாகர் வலியுறுத்தல்

கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க 18 வயது நிரம்பியவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி
கொரோனாவுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ள அனுமதி வழங்கி இருக்கிறது. நாடு முழுவதும் நாளை பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க உள்ளது. கர்நாடகத்திலும் தனியார் ஆஸ்பத்திரிகள், பிற தனியார் மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம். ஏற்கனவே 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டு இருப்பவர்கள், இந்த பூஸ்டர் தடுப்பூசி போட தகுதி படைத்தவர்கள் ஆவார்கள். 2-வது டோஸ் தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் நிறைவு பெற்றிருந்தால், அவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
கொரோனா பாதிப்பில் இருந்து...
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இதுவரை 185 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தி உள்ளது. கர்நாடகத்திலும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு இதுவரை 10.47 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தி உள்ளது. மாநிலத்தில் 5 கோடியே 21 லட்சத்து 542 பேர் முதல் டோஸ் தடுப்பூசியை முழுமையாக செலுத்தி இருக்கிறார்கள். 4 கோடியே 97 லட்சத்து 8,909 பேர் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதன்மூலம் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மாநிலத்தில் 95 சதவீதம் பேர் இருக்கிறார்கள். 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
கொரோனா பாதிப்பில் இருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்ள மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதியுடன், பூஸ்டர் தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டோர் போட்டு கொள்ள வேண்டும். பூஸ்டர் தடுப்பூசியும் தேவையானதாகும்.
இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.
Related Tags :
Next Story