அட்டகாசம் செய்த காட்டு யானையை ‘கும்கி’கள் உதவியுடன் பிடித்த வனத்துறையினர்

சிக்கமகளூரு அருகே தொடர் அட்டகாசம் செய்து வந்த காட்டுயானையை கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர். பின்னர் அந்த காட்டுயானை பந்திப்பூர் வனப்பகுதியில் விடப்பட்டது.
சிக்கமகளூரு:
காட்டுயானைகள் அட்டகாசம்
சிக்கமகளூரு மாவட்டம் பீகனஹள்ளி மற்றும் ஹம்பாபுரா கிராமங்களில் கடந்த 3 மாதங்களாக 2 காட்டுயானைகள் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தன. அவைகள் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை நாசப்படுத்தி வந்தன. மேலும் கிராம மக்களையும் அச்சுறுத்தி வந்தன.
இதுபற்றி கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் 2 கிராமங்களிலும் முகாமிட்டு இருந்த காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். இதில் ஒரு காட்டுயானை, காமனஹள்ளி வனப்பகுதிக்கு சென்றுவிட்டது. ஆனால் மற்றொரு காட்டுயானை தொடர்ந்து கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தது.
12 நாட்களாக முகாமிட்ட வனத்துறையினர்
இதனால் அந்த காட்டுயானையை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதுதொடர்பாக அவர்கள் அரசிடமும் அனுமதி பெற்றனர். இதையடுத்து கடந்த 12 நாட்களாக பீகனஹள்ளி கிராமத்தில் வனத்துறையினர் முகாமிட்டு காட்டுயானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். மேலும் காட்டுயானையை பிடிப்பதற்காக கும்கி யானைகளான பீமா, அர்ஜூனா ஆகிய 2 யானைகளும் நாகரஒலே யானைகள் முகாமில் இருந்து லாரிகள் மூலம் வரவழைக்கப்பட்டன. அதேபோல் சிவமொக்கா மாவட்டம் சக்கரேபைலு யானைகள் முகாமில் இருந்து பாலண்ணா, பானுமதி உள்பட 3 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டன.
கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் அந்த காட்டுயானையை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் அந்த காட்டுயானை மீண்டும் பீகனஹள்ளி கிராமம் அருகே வந்தது.
கும்கி யானைகள் உதவியுடன்...
அதை கவனித்த வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் காட்டுயானையை பிடிக்க முயற்சித்தனர். அப்போது அந்த காட்டுயானை ஆக்ரோஷத்துடன் அங்கிருந்து வேகமாக ஓட்டம் பிடித்தது. அந்த காட்டுயானையை கும்கி யானைகள் விரட்டிச்சென்று சுற்றி வளைத்து மடக்கின. பின்னர் கால்நடை டாக்டர் துப்பாக்கி மூலம் அந்த காட்டுயானைக்கு மயக்க ஊசி செலுத்தினார்.
இருப்பினும் சிறிது நேரம் முரண்டுபிடித்த அந்த காட்டுயானையை கும்கி யானைகள் ஆசுவாசப்படுத்தின. அதையடுத்து அந்த காட்டுயானை மயங்கியது. பின்னர் மயக்கம் தெளிந்ததும் அந்த காட்டுயானையை, கும்கி யானைகள் உதவியுடன் பொக்லைன் எந்திரம் கொண்டு வந்து லாரியில் வனத்துறையினர் ஏற்றினர்.
பந்திப்பூர் வனப்பகுதியில் விடப்பட்டது
அதையடுத்து அந்த காட்டுயானை சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டது. பிடிபட்ட காட்டுயானை ஆண் யானை என்றும், அதற்கு 30 முதல் 35 வயது வரை இருக்கலாம் என்றும் வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொடர் அட்டகாசம் செய்து வந்த காட்டுயானை பிடிபட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Related Tags :
Next Story